மலேசியாவில் உயிரிழந்த தமிழக இளைஞரின் உடல் 2 மாதத்துக்கு பிறகு சென்னை வந்தது. உடலை வாங்க அண்ணன் மறுத்ததால் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள அம்மாபேட்டையை சேர்ந்தவர் சிவகாமி. இவருக்கு தம்பிதுரை, தங்கதுரை என்ற 2 மகன்கள். தங்கதுரை(வயது 23) 10-வது வகுப்பு வரை படித்து விட்டு வேலை தேடி அலைந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சிதம்பரத்தைச் சேர்ந்த சரோஜா மூலமாக மலேசியாவில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சமையல் வேலைக்கு தங்கதுரையை அனுப்பி வைத்தார். பின்னர் கோலாலம்பூரில் உள்ள ஒரு கம்பெனிக்கு தங்கதுரையை வேலைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
அங்கு வேலை கஷ்டமாக இருந்துள்ளது. மேலும், தனது பாஸ்போர்ட்டையும் பிடுங்கி வைத்துக்கொண்டதாகவும் தங்கதுரை வீட்டில் கூறினார். உடனே இது குறித்து சரோஜாவிடம் தங்கதுரை குடும்பத்தினர் முறையிட்டனர்.
அதன் பிறகு சரோஜா உறவினர் வீட்டிலேயே மீண்டும் வேலை கொடுத்ததாக தெரிகிறது. இதை குடும்பத்தினரிடம் தெரிவித்த தங்கதுரை, 10 நாளில் ஊருக்கு வருகிறேன் என்றும் கூறியுள்ளார். அவர் தொலைபேசியில் பேசி 5 நாள் கழித்து 27-7-2006 அன்று தங்கதுரை தூக்குப்போட்டு இறந்ததாக மலேசியாவில் இருந்து தகவல் வந்தது. இது அவரது அண்ணன் தம்பிதுரைக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதனால் தம்பிதுரை இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்திய தூதரகம் மூலம் தங்கதுரை உடலை இந்தியா கொண்டு வர ஏற்பாடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவரது உடலை விமானத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி நேற்று முன்தினம் இரவு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் தங்கதுரையின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது. ஆனால் உடலை வாங்க மறுத்த அவரது அண்ணன் தம்பிதுரை தனது தம்பியின் சாவில் மர்மம் இருப்பதாக விமான நிலைய காவல்துறையில் புகார் செய்தார்.
பின்னர் தங்கதுரையின் உடலை மறுபிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை உறவினர்கள் வாங்கிக் கொண்டு சிதம்பரத்துக்கு எடுத்து சென்றார்கள்.
இந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்கொலை இல்லாமல் வேறுவிதமாக மாற்றம் இருந்தால் வழக்கு சிதம்பரம் காவல்துறைக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.