அமெரிக்காவில் பணியாற்றிவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் கோவையில் 300 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.10 கோடி அளிக்க முன்வந்துள்ளார்!
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் கலாநிதி, அமெரிக்காவில் குடியேறி மருத்துவப் பணியாற்றி வரும் சிறுநீரக சிகிச்சை நிபுணர் அழகிரிசாமி, கோவை மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைத் துறையை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ரூ.10 கோடி வரை நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளதாகவும் கூறினார்.
ஆனால், கோவை மருத்துவமனையில் அதற்கான இடவசதி இல்லாததால் மருத்துவமனையை ஒட்டியுள்ள 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அங்கு மருத்துவமனையை கட்டுவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான கட்டுமான வரைபடத்தை மருத்துவர் அழகிரிசாமிக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் கூறிய மருத்துவர் கலாநிதி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்குமாறு கோரி மாநில சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறினார்.