குறைவான ஊதியம் வழங்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, பஹ்ரைனை சேர்ந்த 250 இந்திய தொழிலாளர்கள் இந்திய தூதரகத்திற்கு இன்று ஊர்வலமாக சென்றனர்.
மானாமாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு ஊர்வலமாக சென்ற இந்திய தொழிலாளர்கள் மிகக்குறைந்த ஊதியம் மற்றும் கொடுமையான பணி முறைகள் குறித்து கண்டனம் தெரிவித்தனர். குறைவான ஊதியம் பெற்று, விலங்குகளைப் போல வாழ்கிறோம். எந்தவிதமான வசதிகளும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. போதிய படுக்கை வசதியில்லாத ஒரே அறையில் 10 பேர் உறங்குகிறோம். இதனை நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித பயனுமில்லை என்று ஒரு தொழிலாளர் குமுறினார்.
தொடர்ந்து, பேருந்துகளின் மூலமாக அடிலியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்று அங்கும் தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.4,500 மட்டுமே அளிக்கப்படுவதாகவும், கூடுதம் நேரம் வேலை செய்தாலும் ரூ.6 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பஹ்ரைனில் ஊதிய உயர்வும், தங்குமிடம், மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ள ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். ஆறு மில்லியன் டாலர் மதிப்புள்ள துர்ராத் அல் பஹ்ரைன் திட்டத்திற்காக பணிபுரியும் இந்த இந்திய தொழிலாளர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி கூட செய்து தரப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலைவனப் பகுதியில் 50 கி.மீ. நடந்து இந்திய தூதரகத்திற்கு சென்ற தொழிலாளர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இந்தியாவில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது ரூ.5,700 மட்டுமே வழங்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர். பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரே குளியலறையை 30 பேர் பயன்படுத்துவதாகவும், தொழிற்சாலை நிர்வாகத்தால் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவற்றிற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தொழிலாளர்கள் அறிவித்துள்ள நிலையில், போராட்டத்தை தொடர்ந்தால் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தொழிற்சாலை நிர்வாகம் எச்சரித்துள்ளது.