நடுத்தர அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கு தனி இணைய தளம்!
வியாழன், 13 மார்ச் 2008 (18:32 IST)
சாதாரண, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த அயல்நாடு வாழ் இந்தியர்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்படும் வகையில் புதிய இணைய பல்கலைத் தள (போர்ட்டல்) சேவை துவக்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கில் வருமானம் பெறும் அயல்நாடு வாழ் இந்தியர்கள் நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்தவரிசையில், தொழிலதிபர் லட்சுமி மிட்டல், சுவராஜ் பால், மேக்நாட் தேசாய் போன்றவர்கள் எப்போதும் மிக பிரபலமாக உள்ளனர். இதுபோன்ற கோடீஸ்வர அயல்நாடுவாழ் இந்தியர்களின் நலனுக்காக பிரவேசி பாரதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளும், கூட்டங்களும் நடத்தப்படுகிறது.
குறிப்பாக இவற்றில் பங்கேற்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோடீஸ்வர இந்தியர்கள் தாங்கள் பிறந்த பகுதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளவும், அப்பகுதிகள் வளர்ச்சி பெற சில திட்டங்களை நிறைவேற்றவும் விருப்பம் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்று ஆப்பிரிக்க, அரபு நாடுகளில் வாழும் சாதாரண, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த இந்தியர்களுக்கும் தனித்த அமைப்பு தேவை என்பது நீண்டநாட்களாக உணரப்பட்டுவந்த நிலையில் 'தஸ்வீர்-இ-ஹிந்' என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இதன் (www.tasveer-e-hind.com) இணைய பல்கலைத் தள சேவையை மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் துவக்கி வைத்தார்.
அமைப்பின் நிறுவனர் ஆஷிப் கூறுகையில், 'இந்த இணைய தளத்தின் வழியாக சாதாரண, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த அயல்நாடுவாழ் இந்தியர்கள் தங்களது பிரச்சனைகள், கோரிக்கைகள், ஆலோசனைகள் ஆகியவற்றை இந்திய அரசுக்கு தெரிவிக்கலாம்' என்றார்.
இந்த இணையத் தளம் மத்திய கிழக்கு நாடுகளிலும் பிரபலப்படுத்தப்பட உள்ளது. இந்திய அமைச்சர்கள், தூதரகங்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த தலைமை அதிகாரிகள் ஆகியவர்களையும் இந்த இணைய வழி சேவை மூலம் தொடர்புகொள்ளும் வகையில் வசதிகள் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த முயற்சி அரசுக்கும், அயல்நாடுவாழ் இந்தியர்களுக்குமான இடைவெளியை போக்கும் என நம்பலாம். என்றாலும், இது அரசின் முறையான அணுகுமுறையை பொருத்தே உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.