தொழிலாளர் பற்றாக்குறை: அரபு நாடுகளில் பணிகள் பாதிப்பு!

புதன், 12 மார்ச் 2008 (17:05 IST)
தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அரபு நாடுகளில் 160-க்கும் மேற்பட்ட கட்டுமான பணிகள் ஸ்தம்பித்துள்ளன.

துபாயில் மட்டும் 6.4 லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் நடந்து வருகின்றன. அரபு நாடுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் 10 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரியும் நிலையில், 95 விழுக்காடு பணியை வெளிநாட்டினர் தான் மேற்கொள்கின்றனர்.

டயனமிக் ஸ்டபிங் சொல்யூசன்ஸ் நிறுவன துணைத் தலைவர் சமிர் கோஷ்லா கூறுகையில், 'அரபு நாடுகளில் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அயல்நாட்டினரில் 42.5 விழுக்காட்டினர் இந்தியர்கள். கட்டுமான நிறுவனங்களில் 60 முதல் 70 விழுக்காடு இந்தியர்கள் பணிபுரிகின்றனர். பெரும்பாலான முன்னணி ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

அரபு நாடுகளில் ஆகும் செலவுகள் இந்திய தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதில்லை. இதுதவிர அடிக்கடி நடக்கும் வேலை நிறுத்த போராட்டங்கள், சில நேரங்களில் நடக்கும் வன்முறைகள் ஆகியவற்றால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.

குறைந்தபட்ச ஊதிய திட்டத்தை அமல்படுத்த இந்திய அரசு முனைப்பு காட்டிவருவதற்கு அயல்நாடுவாழ் இந்தியர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால், இந்த திட்டத்திற்கு அரபு நாடுகளில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

'அனைத்து காலங்களிலும் அரபுநாடுகளில் கட்டுமான சந்தை உச்சத்தில் இருக்கிறது. சந்தை தாக்கத்திற்கான எந்தவித அறிகுறியும் இல்லை' என்று அல் ஹப்தூர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட் சேவாஜ் தெரிவிக்கிறார்.

அராப்டெக் நிறுவன இயக்குனர் கிரேக் கிரிஸ்டோபிட்ஸ் கூறுகையில், 'தற்போது எங்கள் நிறுவனத்தில் 40 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இந்த ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 50 விழுக்காடு உயர்த்தப்படும்' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்