இந்தியர்கள் உட்பட பாலியல் தொழிலில் ஈடுபட்ட 190 ஆசிய பெண்களை துபாய் நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
துபாய் நாட்டின் நய்ஃப் பகுதியில் உள்ள சில விடுதிகளில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அதிகாரிகள் அப்பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அங்கு சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடத்தி வந்த 190 ஆசிய நாட்டு பெண்களை கைது செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதில் இந்திய நாட்டு பெண்களும் உள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்ற போதிலும், சரியான எண்ணிக்கை தெரிவிக்கவில்லை.
ஐக்கிய அரபு நாடுகளில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டப்படி, இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 170 பாலியல் தொழிலாளர்கள் கும்பலாக கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக அதிக எண்ணிக்கையில் பாலியல் தொழிலாளர்கள் பிடிபட்டுள்ளனர்.
முன்னதாக துபாய் காவல்துறை முதன்மை அதிகாரி தாஹி கால்ஃபன் தமிம் கூறுகையில், "பாலியல் தொழிலில் ஈடுபடுவர்கள் மீதான நடவடிக்கை தொடரும். இதுபோன்ற தொழிலில் அப்பாவி பெண்கள் ஈடுபடுத்தப்பட்டால் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்காகவே நாடு முழுவதிலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை அமைத்து வருவதாக துபாய் அரசு கடந்த வாரம் அறிவித்துள்ளது. இந்த மையத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுக்காப்பு, ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம், மன ரீதியான ஆலோசனைகள் ஆகியவை அளிக்கப்படுகிறது.