அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தின் பொது பண்டிகையில் ஒன்றாக தீபாவளி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியை உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்றனர். இந்தியா- அமெரிக்காவுக்கான இந்து-கிறிஸ்துவ நல்லுறவு தலைவர் ராஜன் ஜிட், உட்டா மாகாண ஆளுநர் ஜோன் ஹன்ட்ஸ்மேனை சந்தித்து, 'தீபாவளி தினத்தை மாகாண பொது பண்டிகையாக அறிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
அதற்கு 'கண்டிப்பாக, ஏன் அறிவிக்க கூடாது' என்ற ஆளுநர் ஹன்ட்ஸ்மேன் உட்டா மாகாண பண்டிகைளில் ஒன்றாக தீபத்திருநாளான தீபாவளி பண்டிகையையும் உடனே அறிவித்துள்ளார்.
மேலும், "அமெரிக்காவிலேயே உட்டா மாகாணத்தின் ஆளுநர் மாளிகையில் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்றுள்ளேன். இந்துக்களின் பண்பாடு என்னை மிகவும் கவர்ந்துள்ளது" என்று ஆளுநர் ஹன்ட்ஸ்மேன் கூறியுள்ளார்.
உட்டா மாகாணத்தில் 900 இந்துமத குடும்பத்தினர் வசிக்கும்நிலையில், இந்த அறிவிப்பால், இனிமேல் தீபாவளி கொண்டாட்டம் அமெரிக்காவிலும் கலைகட்டும்.