டெல்லியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்!

ஐந்தாவது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் புதுடெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது!

வெளிநாடு வாழ் இந்தியர்களும், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கும் இந்த தினம் டெல்லியில் கொண்டாடப்படுவது இது 3வது முறையாகும். ஒரு முறை ஹைதராபாத்திலும், மற்றொரு முறை மும்பையிலும் நடைபெற்றுள்ளது.

இந்திய விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங் இவ்விழாவைத் துவக்கி வைப்பார். விழாவில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பல்வேறு விருதுகளை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வழங்குவார். இந்த விருதுகளுக்கான நபர்களை குடியரசுத் துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் தலைமையிலான ஆணையம் தேர்வு செய்யும் என்றார்.

இந்த விழாவின் துவக்க நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்பார்.

வெளிநாடுகளில் இருந்து சுமார் 2000 பேர் இந்த விழாவில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை டெல்லி அரசும், இந்திய தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் என்றும் ரவி கூறினார்.

அயல்நாடு வாழ் இந்தியக் குழந்தைகளின் கல்வி -அதிலும் குறிப்பாக அரபு நாடுகள், அயல்நாடுகளில் பணியாற்றச் செல்லும் இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், உடல்நலம், அந்நிய முதலீடு ஆகிய பிரச்சினைகள் குறித்து இந்த விழாவில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ரவி கூறினார்.

இந்த விழா குறித்த அறிக்கையை நான் மத்திய அரசிற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதை வைத்துத்தான் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றார் ரவி.

முதலில் கேரளாவின் கொச்சியிலேயே வெளிநாடு வாழ் இந்தியர்களின் தினம் கொண்டாடப்படுவதாக இருந்தது. ஆனால் இம்முறை அது சாத்தியமில்லை என்பதால் டெல்லியில் நடைபெறுகிறது. எனினும் அடுத்த முறை கேரளாவிற்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் ரவி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்