சென்னையில் அயல்நாடு வாழ் இந்தியர் தின விழா: குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்பு!
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (18:05 IST)
அயல்நாடு வாழ் இந்தியர் தின விழா முதன்முதலாக சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கிறது. இதில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
7-வது அயல்நாடுவாழ் இந்தியர் தின விழாவை முதன் முதலாக சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடக்கிறது.
8ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு விழாவை முறைப்படி துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். 9ஆம் தேதி நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றுகிறார். நாட்டின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் சிறந்த பங்காற்றிய அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கு விருதுகளையும் அவர் வழங்கி கவுரவிக்கிறார்.
அயல்நாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்துடன், தமிழக அரசு, இந்திய தொழில் கட்டமைப்பு (சி.ஐ.ஐ.) ஆகியவையும் இணைந்து இந்த விழா ஏற்பாடுகளை செய்கின்றன. விழாவில பல தலைப்புகளில் கருத்தரங்கங்களும் சிறப்புக் கண்காட்சிகளும் நடக்க உள்ளன.
ஒரு அயல்நாட்டினராக தென் ஆப்ரிக்காவில் 20 ஆண்டு வசித்து வந்த மகாத்மா காந்தி 1915ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி நாடு திரும்பினார். இதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 9ஆம் தேதி அயல்நாடு வாழ் இந்தியர் தினமாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.