சிங்கப்பூரில் இந்தியர் தின விழா: அதிபர், பிரதமர் பங்கேற்பு!

திங்கள், 28 ஜூலை 2008 (19:10 IST)
சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் இந்தியர் தின விழா அந்நாட்டில் அக்டோபர் மாதம் நடக்கிறது. இ‌வ்‌விழா‌வி‌ல் அந்நாட்டின் அதிபர், பிரதமர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

ஒரு வெளிநாட்டினராக தென் ஆப்ரிக்காவில் 20 ஆண்டு வசித்து வந்த மகாத்மா காந்தி 1915ஆ‌ம் ஆண்டு ஜனவரி 9ஆ‌ம் தேதி நாடு திரும்பினார். இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 9ஆ‌ம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியரின் ஆக்கபூர்வமான செயல்கள், பொருளாதார வளர்ச்சி, உதவும் மனப்பான்மை ஆகியவற்றை பாராட்டும் வகையிலும் அங்கீகாரம் வழங்கும் வகையிலும் மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்தின் சார்பில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா இந்தியாவில் 2009ஆ‌ம் ஆண்டு ஜனவரி 7ஆ‌ம் தேதி முதல் 9ஆ‌ம் தேதி வரை நடக்கிறது.

இந்தியாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இயலாத காரணத்தால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவாழ் இந்தியர்கள் சேர்ந்து 'வெளிநாடு வாழ் இந்தியர் தின விழாவை' கொண்டாடினர். இந்தியாவுக்கு வெளியே இந்த விழா நடத்தப்பட்டது இதுவே முதல் முறை.

இரண்டாவது முறையாக இந்த விழாவை சிங்கப்பூரில் நடத்த அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர். 'இந்தியரின் செயலாற்றல்' என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த விழா சிங்கப்பூர் ரிட்ஸ் கார்ல்டன் மில்லெனியா ஓட்டல், சன்டெக் சிங்கப்பூர் இன்டர்நேஷனல் மைய வளாகத்தில் அக்டோபர் 10, 11ஆ‌ம் தேதிகளில் நடக்கிறது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக அந்நாட்டின் அதிபர் எஸ்.ஆர். நாதன், பிரதமர் லீ சியென் லூங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

இந்தியா-சிங்கப்பூர் தொழில் வர்த்தக கூட்டமைப்பு, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து இதற்கான ஏற்பாடுகளை மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகம் செய்து வருகிறது.

இ‌தி‌ல், ஆசியான் நாடுகள், ஆசிய பசிபிக், கிழக்கு ஆசிய நாடுகள் உள்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்