ஹஜ் புனித யாத்திரைக்காகச் சென்று விசா காலம் முடிவடைந்தும் சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் 750 இந்தியர்களை வெளியேற்றும் முயற்சியில் அரேபிய அரசு ஈடுபட்டுள்ளது.
ஹஜ் தங்குமிட அனுமதி பெற்று சவுதி அரேபியாவிற்குச் சென்று அங்கு அனுமதி காலத்திற்கும் மேலாக தங்கி வேலை தேடி வருபவர்களை வெளியேற்றும் முயற்சியில் அந்நாட்டு அரசு மும்முரமாக செயலாற்றி வருகிறது.
அதன்படி, செட்டாவில் உள்ள தர்கீ வெளியேற்றும் மையத்தில் 350 இந்தியர்களும், மதினா உல் அஜ் வெளியேற்றும் மையத்தில் 350 இந்தியர்களும் வெளியேற்றும் நடிவடிக்கையாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று செட்டாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அங்கிருக்கும் இந்தியர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் இந்தியத் தூதரகம் 24 மணி நேரமும் இயங்கும் உதவி நிலையத்தை அமைத்துள்ளது. விசா காலம் முடிந்த இந்தியர்கள் தகுந்த ஆவணங்களுடன் இந்த மையத்திற்கு வந்து தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.