கொலையாகும் என்.ஆர்.ஐ. பஞ்சாபிகள் : அமெரிக்காவின் அலட்சிய போக்கு!

செவ்வாய், 29 ஜனவரி 2008 (20:22 IST)
அமெரிக்காவில் நடக்கும் பஞ்சாபியர்கள் கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் அந்நாட்டு காவல்துறை அக்கறை இல்லாமல் நடந்துகொள்வதாக குற்றம்சாட்டப்படுகிறது.

பாட்டியாலாவை சேர்ந்த தொழிலதிபர் ராமனபிரீத் சிங் அமெmsக்காவுக்கு குடிபெயர்ந்தார். கலிபோர்னியாவில் 10 ஆண்டுக்கும் மேலாக போக்குவரத்து தொழில் செய்துவந்த அவர் 2006-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை ஒருவரைக்கூட அமெரிக்க காவல்துறையினர் கைது செய்யவில்லை.

இதுகுறித்து அவரது சகோதரர் ஹர்பல் சிங் கூறுகையில், "எனது அண்ணன் கிரீன் கார்டு பெற்றவர். அவரது கொலை சம்பவம் தொடர்பாக அமெரிக்கா சென்று அந்நாட்டு துப்பறியும் பிரிவிடம் வலியுறுத்தினேன். ஆனால், கொலை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கு எதிராக இந்தியாவில் நடக்கும் குற்றச்சம்பவங்களால் காவல்துறையும், பத்திரிக்கைகளும் பரபரப்பு அடைகின்றன.

அதன்பிறகு, குற்றவாளி தப்பிப்பது கடினமானதாகிவிடுகிறது. ஆனால், வேலைக்கான விசா பெற்றவர்களுக்கும், கிரீன் கார்டு பெற்றவர்களுக்கும் எதிராக அமெரிக்காவில் நடக்கும் குற்றங்களில் இந்த நிலை இல்லை. அங்கு வாழும் இந்தியர்கள் பற்றி கவலைப்படுவதற்கு யாரும் இல்லை. அமெரிக்காவில் பஞ்சாபியர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களுக்கு தீர்வு காண இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கலிபோர்னியாவில் எம்.டெக் படித்து வந்த ருபின்தர் சிங் ஒரு கடையில் பகுதி நேர வேலை பார்த்து வந்தார். அங்கு 2007 டிசம்பர் 9ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். கடையில் கண்காணிப்பு காமிராக்கள் இருந்தும் கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்க அமெரிக்க காவல்துறை தவறிவிட்டது.

இதுதவிர, அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி பகுதியில் 2004-ம் ஆண்டு பாட்டியாலவை சேர்ந்த மஞ்சித் சிங் என்ற தொழிலதிபர் கொலை செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த வழக்கில் கொலை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 'அமெரிக்க காவல்துறை குற்றவாளிகளை கண்டுபிடிபிடிக்கும் என்பதில் இனியும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை' என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

டிசம்பர் 27ம் தேதி கலிபோர்னியாவில் கொலை செய்யப்பட்ட பரம்ஜித் கல்சி, ரவிந்தர் சிங் கல்சி ஆகிய இரண்டு பஞ்சாபியரது உடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியா கொண்டு வரப்பட்டது.

அவர்களது உடலை இந்தியா கொண்டு வருவதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருந்தோம். இதுபோன்ற கொலை செய்யப்பட்டவர்களின் ரத்த சொந்தம் உடையவர்களின் விசா சட்டத்தை தளர்த்த வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்