இந்தியத் தொழிலாளர்களை தக்கவைத்துக் கொள்ளுமா வளைகுடா நிறுவனங்கள்?
திங்கள், 11 பிப்ரவரி 2008 (15:53 IST)
அதிகரித்து வரும் பணவீக்க விகிதம், வளைகுடா நாடுகளின் நாணய மதிப்பு குறைவின் எதிரொலி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்திய - பாகிஸ்தானிய தொழிலாளர்கள் தங்கள் பணியில் திருப்தி இல்லாமல் உள்ளதுடன், வேறு புதிய நாடுகளுக்கு குடிபெயர ஆர்வமாக உள்ளனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அரேபியன் பிசினஸ்.காம் ஊதியம் தொடர்பாக நடத்திய ஆய்வில், 69 விழுக்காட்டு தொழிலாளர்கள் நடப்பு ஆண்டிலேயே தங்களது பணியை துறந்து விட முடிவு செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அங்கு வாழும் 16 விழுக்காடு இந்தியர்களும், 13 விழுக்காடு பாகிஸ்தானியர்கள் மட்டும்தான் தங்களது பணியை மாற்றுவதில் குறைந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றனர். அமெரிக்க டாலர் மதிப்பு குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளின் நாணயங்களும் வீழ்ச்சியடையத் துவங்கியது. இதனால் பணவீக்க விகிதம் அதிகரிக்கத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்த கடந்த 2 ஆண்டுகளாகவே அங்கு பொருட்களின் விலையேற்றமும் அதிகரிக்கத் தொடங்கியதுதான் இந்த நிலைக்கு காரணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் பணவீக்க விகிதம் கடந்த ஆண்டில் கத்தாரில் - 14 %, ஓமன்-7.6%, குவைத்-6.2%, சவூதி அரேபியா-6%, பக்ரைன்-4.9%, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-9.3% என்ற அளவுக்கு அதிகரித்தது.
வளைகுடா நாடுகளில் கிட்டதட்ட 40 முதல் 60 லட்சம் உள்ள இந்திய தொழிலாளர்களை நம்பித்தான் அங்கு தொழில் நிறுவனங்கள் உள்ளன. நடப்பாண்டு அங்கு உள்ள இந்திய தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் தங்கள் பணியை மாற்ற விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு அங்குள்ள நிறுவனங்களுக்கு தொழிலாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதில் சிக்கலான காலமாக இந்த ஆண்டு இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.
வளைகுடா நாடுகளில் வேலை செய்ய விருப்பம் தற்போது குறைந்து வருகிறது. சவூதி அரேபியாவில் 69 %, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஸில் உள்ள தொழிலாளர்களில் 68 விழுக்காட்டினரும் வேலையை மாற்றுவதில் ஆர்வமாக உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.