இந்திய ரியல் எஸ்டேட் கண்காட்சி - குவைத்தில் நடக்கிறது!

சனி, 12 ஜனவரி 2008 (19:37 IST)
அயல்நாடு வாழ் இந்தியர்களை சொந்த நாட்டில் முதலீடு செய்ய வைக்கும் முயற்சியாக, இந்திய ரியல் எஸ்டேட் கண்காட்சி குவைத்தில் நடக்கிறது.
இந்தியாவின் ரியல் எஸ்டேட் வளர்ச்சி புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் இரண்டாவது அதிக தொழிலாளர்களை கொண்ட துறையாகவும் ரியல் எஸ்டேட் வளர்ந்துள்ளது. ஆண்டுக்கு 20 சதவிகித வளர்ச்சி பெற்று வரும் இத்துறையின் தற்போதைய மதிப்பு 12 பில்லியன் அமெரிக்க டாலர். வரும் 2010 ஆம் ஆண்டிற்குள் இதன் மதிப்பு 50 பில்லியன் டாலராக உயரும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதே அளவுக்கு முதலீடு வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.
இத்துறையில் அயல்நாடு வாழ் இந்தியர்களையும் முதலீடு செய்ய வைக்கும் வகையில் அதிகமான இந்தியர்கள் வாழும் நாடுகளில் ரியல் எஸ்டேட் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இந்துஸ் குழுமம் துபாயில் நடத்திய கண்காட்சியில் ரூ.300 கோடிக்கு வர்த்தக விசாரணையும், ரூ.100 கோடிக்கு வர்த்தகமும் நடந்தது. தொடர்ந்து மஸ்கட்டில் நடத்தப்பட்ட கண்காட்சியில் ரூ.700 கோடிக்கு வர்த்தக விசாரணையும், ரூ.80 கோடிக்கு வர்த்தகமும் நடந்தது.
இந்நிலையில் 200-க்கும் மேற்பட்ட திட்டங்களுடன் துபாயில் துவக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் கண்காட்சி இதற்கு முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சியை துவககி வைத்த இந்திய தூதரக அதிகாரி தினேஷ் பாட்டியா கூறுகையில், "அதிக இந்தியர்கள் வாழும் குவைத்தில் இந்த கண்காட்சியை நடத்துவது மிகச்சரியானது. இந்த முயற்சி இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதாக மட்டுமின்றி, சொந்த நாட்டில் கனவு வீட்டை கட்டுவதற்கும் வாய்ப்பாக அமையும்," என்றார்.
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் உள்நாட்டினர், அயல்நாட்டினர் செய்யும் முதலீட்டில் 70 சதவீதம் புதிய தகவல்தொழில்நுட்ப துறைக்காக இருக்கும் என்று ரியல் எஸ்டேட் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னணி இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இக்கண்காட்சியில் உடனடி கடன் வசதியும் அளிக்கப்படுகிறது. கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்