இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்தியாவை பற்றிய முதுநிலைப் பட்டப் படிப்பை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அயல்நாட்டு மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ள , 'எம்.எஸ்.சி., சமகால இந்தியா' என்ற புதிய படிப்பில், இந்தியாவின் சாதனைகள் மற்றும் அவை தொடர்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து சிறந்த ஆராய்ச்சிகளைக் கொண்டு கற்றுத் தரப்படுகிறது. சமூக அறிவியல், வரலாறு சார்ந்த மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த பட்டப் படிப்பிற்கான பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தனித்துவமிக்க வேலை பெறவும், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள், அரசுசாரா அமைப்புகள், பத்திரிக்கை துறைகளில் வேலைவாய்ப்பு பெற விரும்புவர்களுக்கும், இந்தியாவை பற்றி அறிந்து கொள்ளத் துடிக்கும் மாணவர்களுக்கும் ஏற்ற கல்வியை இந்த படிப்பு வழங்குகிறது. இந்தியாவை பற்றிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்கான அடிப்படையாகவும் இந்த படிப்பு விளங்கும்.
"உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதனை படைத்து வருவதால், இந்தியாவின் வளர்ச்சியை அறிந்துகொள்ள சர்வதேச அளவில் மாணவர்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது" என்று பல்கலைக்கழக பேராசிரியர் பார்பரா ஹாரிஸ்-ஒய்ட் கூறினார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல இந்தியர்கள் படித்துள்ளது குறிப்பிடத்தக்கது.