அஸ்ஸாமில் என்.ஆர்.ஐ., மாநாடு!

சனி, 12 ஜனவரி 2008 (19:41 IST)
அயல்நாடு வாழ் இந்தியர்களை அஸ்ஸாமில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும் வகையில் இரண்டு நாள் வடகிழக்கு இந்திய முதலீடு மாநாட்டை அம்மாநில அரசு நடத்துகிறது.

இதில் அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்ட்ரேலியா, சுவிட்சர்லாந்த் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய், மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மாநாட்டை துவக்கி வைத்தனர்.

"10 நாடுகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில், மலைப்பிரதேசம் சார்ந்த தொழில், கல்வி, ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு செய்ய அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்" என்று அஸ்ஸாம் தொழில் கூட்டமைப்பு இயக்குநர் அப்கிஜித் பருவா கூறினார்.

துபாயை சேர்ந்த அயல்நாடுவாழ் இந்தியர் ஒமர் இசாசின் கூறுகையில், "அஸ்ஸாமில் மருத்துவ கல்லூரியை துவங்க உள்ள வசதி வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்ய வந்தோம். இங்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் உள்ளது" என்றார்.

மேலும் கவுகாத்தியில் நடத்தப்படும் கண்காட்சியில், வடகிழக்கு பகுதி மலைவாழ் மக்கள் தயாரித்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் டெல்லியில் நடந்த அயல்நாடு வாழ் இந்தியர்க்ளுக்கான விழாவில் அறிவிக்கப்பட்ட பல்வேறு சலுகைகளின் அடிப்படையில் இந்த மாநாட்டிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்