அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை : இந்தத் தொடரில் சட்டம் நிறைவேற்றப்படும்!

வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கா வரை சென்று பணி புரிந்துவரும் அயல்நாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று அயல்நாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார்!

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வயலார் ரவி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் செய்யப்படவுள்ள இந்த திருத்தத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்துள்ளதால் இந்தக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

இது தொடர்பாக கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், பிரதமர் மன்மோகனையும், சட்ட அமைச்சர் பரத்வாஜையும் சந்தித்துப் பேசியதற்கு ரவி நன்றி கூறினார்.

வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள், வரும் கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியுமா என்று கேட்டதற்கு, அதனை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ரவி பதிலளித்தார்.

ஆயினும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் வாக்களிப்பதில் எந்தத் தடையும் இருப்பதாக தான் கருதவில்லை என்று கூறிய ரவி, வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் குறைகளை கேட்டறிய மேலும் 4 இடங்களில் என்.ஆர்.ஐ. நல மையங்கள் துவக்கப்படவுள்ளதாகக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்