இளவரசனின் வழக்கறிஞர் ரஜினிகாந்தின் சிறப்பு பேட்டி

புதன், 10 ஜூலை 2013 (21:59 IST)
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தர்மபுரி இளவரசன் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இந்த வழக்கைப் பற்றி இளவரசனின் வழக்கறிஞர் ரஜினிகாந்த் நமது வெப்துனியா இணையதளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டி.

இளவரசனுடைய மரணம் கொலை என்றும், தற்கொலை என்றும் யூகிக்கப்படும் சூழலில் இளவரசனுடைய வழக்கறிஞராகிய உங்களது கருத்து?

இளவரசனுடைய மரணம் என்பது ஒரு திட்டமிட்ட படுகொலை என்கிற முடிவுக்கு வருவதற்கான அனைத்து ஆதாரங்கள், சாட்சியங்கள், தடையங்கள் மற்றும் சந்தர்ப்ப சூழல்கள் எல்லாமே இது ஒரு கொலை என்று முடிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஜூலை 2 ஆம் தேதி என்னிடம் பேசிவிட்டு சென்னையிலிருந்து தர்மபுரி திரும்பிய இளவரசன் ஜூலை 3 ஆம் தேதி நத்தம் காலணியில் நண்பர்களோடு தங்கியிருக்கிறார். அதில் பாரதி என்ற நண்பர் முக்கியமானவர். 4 ஆம் தேதி காலையில் பாரதியை அனுப்பி வைத்துவிட்டு தன் தந்தையின் ஏ.டி.எம் கார்டை வாங்கி 9 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து அதில் 7 ஆயிரத்தை தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு 2 ஆயிரத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஒரு 11.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார். ஒரு 12 மணியளவில் தன்னுடைய உறவினர் அறிவழகனுக்கு போன் செய்து நான் சித்தூருக்கு புறப்படுகிறேன். நீ என்னுடன் வந்து என்னை சித்தூரில் விட்டுவிட்டு திரும்பி வந்துவிடு என்று சொல்லுகிறார். அதற்கு அறிவழகன் எனக்கு வகுப்பு இருக்கிறது. என்னால் வரமுடியுமா என்று தெரியவில்லை என்று சொல்லுகிறார். அதன் பிறகு சுமார் 12.40க்கு அறிவழகனே இளவரசனுக்கு போன் செய்து, நான் உன்னுடன் சித்தூர் வரை வருகிறேன். இப்போது எங்கே இருக்கிறாய், வருகிறேன் என்று சொன்னாயே, எப்போது வருகிறாய் என்று கேட்கிறார். அதற்கு இளவரசன், நான் ஒரு 10 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். அதன் பிறகுதான் இளவரசன் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டியது, இளவரசன் சென்னையில் என்னிடம் சித்தூர் செல்வதாகச் சொன்னதும், மறுநாள் தர்மபுரியில் சித்தூர் செல்ல ஆயத்தமானதும் உண்மை. தற்கொலை செய்து கொள்வதற்கான எந்த மனநிலையும் அவருக்குக் கிடையாது. திவ்யா திரும்ப தன்னிடம் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையிடனேயே அவர் இருந்தார்.

இளவரசன் இறந்து கிடந்த இடத்திற்குச் சென்று பார்த்தோமானால், தெளிவாக பல விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும். அவர் இறந்து கிடந்த இடத்திலிருந்து 100 அல்லது 150 மீட்டர் தூரத்திலேயே வீடுகள் இருக்கின்றது. மதியம் 12 மணிக்கு ஒரு பீர் பாட்டிலை வாங்கி சாப்பிட்டார் என்பது கொலையை மறைப்பதற்கான ஒரு ஏற்பாடாகவே தெரிகிறது. அந்த இடத்தில் அமர்ந்து அவர் மது குடித்திருந்தால் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இருப்பவர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் அப்படி யாரும் பார்க்கவில்லை. இளவரசன் உடல் கிடந்த இடத்தில் ரயில் சுமார் 100 கி.மீ வேகத்தில் வருகின்றது. வெறும் 50 கி.மீ வேகத்தில் வருகின்றது என்று எடுத்துக் கொண்டாலும் காற்றின் விசை பலமாக உள்ளது. யாரும் ரயில் அருகே நெருங்க முடியாது. அப்படி அடிபட்டாலும் உடல் சுக்கு நூறாகிவிடும். உடல் அருகே விழாது. பல மீட்டர் தூரம் தூக்கி எறியப்படும். ஆனால் அவர் உடல் தண்டவாளத்திற்கு மிக அருகிலேயே கிடக்கிறது. தலையிலும், கையிலும் உள்ள காயத்தைத் தவிர உடலில் வேறெங்கும் காயங்கள் கிடையாது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே மேலாளர் (பெங்களூர் டிவிஷன்) அனில்குமார் அகர்வால் கூறுகையில், ஜூலை 4 ஆம் தேதி எந்த ரயில் விபத்தும் தர்மபுரி பகுதியில் நடக்கவில்லை. எந்த நபரும் ரயிலில் மோதவில்லை. அப்படியே மோதியிருந்தாலும், இதுமட்டுமே காயமாக இருக்க முடியாது. உடல் சிதைவு ஏற்பட்டிருக்கும். இந்த காயம் ரயில் விபத்தில் ஏற்பட்ட காயமாக இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார். மேலும், இரண்டு மூன்று ரயில்கள் அந்த வழியாகக் கடந்து சென்றிருக்கின்றன. எந்த ரயில் ஓட்டுநரும் விபத்து குறித்த தகவலைச் சொல்லவில்லை. பகல்வேளையில் பயணிகள் ரயிலில், ரயில் பெட்டியின் கதவின் அருகேயும், படியிலும் மக்கள் பயணம் செய்வதுண்டு. அமர்ந்திருக்கும் பயணிகளும் வெளியே வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் அன்றைய தினம் யாரும் இளவரசன் அடிபட்டதை பார்க்கவில்லை. அவர் உடலையும் பார்க்கவில்லை.

FILE
கடைசியாக தங்களுடன் இளவரசன் பேசிய போது அவரின் மனநிலை எப்படி இருந்தது? கடைசியாக உங்களிடம் பகிர்ந்து கொண்ட செய்தி என்ன?

ஜூலை 2 ஆம் தேதி இளவரசன் சென்னையில் இருக்கிறார். 3 ஆம் தேதி பிரமாண வாக்குமூலம் (Affidavit) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக, வாக்குமூலத்தை என்னிடம் கொடுத்துவிட்டு புறப்படும் போது, நான் இளவரசனிடம் சொன்ன செய்தி, "சூழல் சரியில்லை. திவ்யா உங்களுக்கு எதிராக எந்தக் கருத்தும் சொல்லவில்லை. அதனால் எப்போது வேண்டுமானாலும் திவ்யா உங்களிடம் வருவதற்கு வாய்ப்பிருப்பதால், பாமகவினரால் உங்களுக்கு சிக்கல் வரலாம். அதனால் நீங்கள் தர்மபுரி செல்ல வேண்டாம். சென்னையிலேயே இருங்கள் என்று சொன்னேன்." அப்போது இளவரசன், "நான் தர்மபுரி செல்ல வேண்டும்." என்றார். காரணம் தர்மபுரியில் இருந்தால்தான் திவ்யாவின் நினைவுகளோடு இருக்க முடியும் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. உங்களுக்கு ஆபத்து நேரலாம்; போக வேண்டாம் என்று வலியுறுத்திய போதும், அவர் கூறியது என்னவென்றால் தர்மபுரியில் இரண்டொரு நாள் தங்கிவிட்டு வேலைக்காக ஆந்திர மாநிலம் சித்தூருக்குச் சென்று விடுவேன் என்று கூறினார்.

இளவரசன் விவகாரத்தை அரசு எவ்வாறு கையாள்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இளவரசனுடைய திருமணம் முதல் இறப்பு வரை மிகப்பெரிய சர்ச்சைகளுக்குள்ளான ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது. அவருடைய காதல் திருமணத்தைக் காரணம் காட்டி 3 தலித் பகுதிகள் எரிக்கப்பட்டது. இது ஒரு மிகப்பெரிய உலகச்செய்தியாக மாறியது. இச்சம்பவத்திற்காக ஜெர்மனியப் பாராளுமன்றம் கூட இந்திய அரசைக் கண்டித்துள்ளது. ஜாதிய வேற்றுமைகளைக் களைய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இந்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஒரு கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருந்த இளவரசன், திவ்யாவைப் பிரிப்பதற்கு பல்வேறு சதித்திட்டங்கள் நடந்து வந்தது. பாமகவின் தலைவர்கள், உள்ளூர் வன்னியர் சங்கப் பிரமுகர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்று தெரிந்திருந்தும் அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. பாதுகாப்பு வழங்கியிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. ஆக இது கொலை என்று உறுதி செய்யப்பட்டால் பாதுகாப்பு வழங்கத் தவறிய பழி அரசின் மீது விழும் என்பதற்காக இதை தற்கொலை என்று மூடி மறைக்க முயற்சிக்கிறது என்பது எங்களுடைய பார்வை.

நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோருடன் பிரேதப் பரிசோதனை வீடியோக்களைப் பார்த்த டாக்டர் தேக்கால் தவிர மற்ற மருத்துவர்கள் மறுபிரேதப் பரிசோதனை தேவையில்லை என்று கூறியுள்ளனர். இது குறித்து தங்கள் கருத்து?

மொத்தம் 6 மருத்துவர்கள் பார்வையிட்டனர். அதில் தேக்காலும் ஒருவர். அதில் மூன்று பேர் ஏற்கனவே தர்மபுரியில் பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டவர்கள். அந்த மூன்று பேரும் ஏற்கனவே விதிமுறைகளை மீறி அவசர அவசரமாக பிரேதப் பரிசோதனை செய்தவர்கள். அவர்கள்தான் முறையாக செய்யாதவர்கள் என்று குற்றம்சாற்றப்படுபவர்கள். அவர்கள் தாங்கள் செய்த பரிசோதனை தவறு என்று எப்படி ஒப்புக்கொள்வார்கள். ஜிப்மர் மருத்துவமனையினுடைய கண்காணிப்பாளர் கூறுகையில், மருத்துவப் பரிசோதனையில் நடந்த குறைபாடுகள் அனைத்தையும் சுட்டிக்காட்டுகிறார். தனக்குத் திருப்தி என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. நிறை எதுவும் இருப்பதாகக் குறிப்பிடவில்லை. ஆனாலும் மறுபரிசோதனை தேவையில்லை என்று இயந்திரத்தனமாகக் கூறியிருக்கிறார். இது மாபெரும் முரண்பாடு. ஆனால் எங்கள் தரப்பில் பார்வையிட்ட தேக்கால் அவர்கள், பரிசோதனையில் நடைந்த முறையற்ற நடைமுறை, ஒழுங்கற்ற மருத்துவப்பரிசோதனை, சட்டவிதிமுறை மீறல் ஆகியவற்றை சுட்டிக்காட்டி மறு பிரேதப் பரிசோதனை அவசியம் என்று கூறியிருக்கிறார். அரசு 2வது பரிசோதனைக்கு முட்டுக்கட்டை போடுவதற்குக் காரணம், நாடே இந்த வழக்கை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில் முதல் பரிசோதனையில் அரசு தவறு செய்திருப்பதை மறைப்பதற்கு எடுக்கும் முயற்சியாகவே நாங்கள் கருதுகிறோம். பிரேதப்பரிசோதனை குறித்து ஒரு ஆய்வு செய்ய ராமச்சந்திரா மருத்துவமனையைச் சார்ந்த சம்பத்குமார் என்ற மருத்துவரை நியமித்துள்ளார்கள். அவர் நாளை உடலை நேரடியாக ஆராய்ந்து அறிக்கை கொடுப்பார். அதன் மீது உயர்நீதிமன்றம் உத்தரவிடுவதாக தெரிகிறது.

இளவரசன் தனது தந்தைக்கும், திவ்யாவுக்கும் எழுதியதாக சொல்லப்படும் கடிதம் குறித்து தங்கள் கருத்து?

இளவரசன் இறந்தவுடன் முதலில் பார்த்தது ஒரு இரயில்வே கண்காணிப்பு ஊழியர் என்பதை அனில்குமார் அகர்வால் உறுதிப்படுத்துகிறார். முதலில் இரயில்வே போலீஸ் மற்றும் உள்ளூர் போலீஸ் அந்த இடத்திற்குப் போகிறார்கள் அதன் பிறகுதான் பொதுமக்கள் கூடுகிறார்கள். அப்படிக் கூடியிருக்கும் போது இறந்து கிடப்பவரின் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு கடிதத்தை ஒருவர் எடுக்கிறார் என்று சொன்னால் அதை யாரும் பார்க்கவில்லையா? நூற்றுக்கணக்கான மக்கள் சுற்றியிருக்கும் போது எல்லாருடைய கவனமும் அந்த சடலத்தின் மீது இருக்கும் போது எப்படி யாருக்கும் தெரியாமல் கடிதத்தை எடுத்திருக்க முடியும். ஆக இது ஒரு ஜோடிப்புதான் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை.

இளவரசனால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கடிதத்தில் கூட முதல் பத்தியில் என்ன சொல்லுகிறார் என்றால், 1 ஆம் தேதி வருவாய் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நீ வரவில்லை என்றால் நான் இந்த உலகத்தில் இருக்கமாட்டேன் என்று உள்ளது. ஆக கடிதம் 1 ஆம் தேதிக்கு முன்பே எழுதப்பட்டதாக அர்த்தம். அடுத்தடுத்த பத்தியில், திவ்யா இனி வரமாட்டார் என்பது போலவும், அதனால் தற்கொலை செய்வதற்கு முடிவெடுத்துவிட்டேன் என்பது போலவும் உள்ளது. ஒரே கடிதத்தில் நான்கு பேருக்கு எழுதியுள்ளார். அந்த எழுத்துகளிலும் வித்தியாசம் உள்ளது. இவ்வாறு பல்வேறு சந்தேகங்கள் அந்த கடிதத்தின் மீது உள்ளது.

தற்போது திவ்யாவின் நிலை குறித்து ஏதேனும் தகவல் உண்டா? அவரின் மனநிலை குறித்து ஏதாவது அறிய முடிந்ததா?

இளவரசன், திவ்யாவைப் பொறுத்தவரை மிகச்சிறந்த காதலர்களாக, மிகச்சிறந்த நண்பர்களாக, மிகச்சிறந்த கணவன் - மனைவியாகத்தான் வாழ்ந்தார்கள். இளவரசன் மீது திவ்யாவுக்கோ அல்லது திவ்யா மீது இளவரசக்கோ எந்தக் குறைபாடும் கிடையாது. சொல்லப்போனால் மூன்று முறை திவ்யா நீதிமன்றத்தில் ஆஜராகி நான் இளவரசனோடுதான் வாழ்வேன்; அவர்தான் என்னுடைய கணவர். என் அம்மா ஆட்கொணர்வு மனு போட்டதெல்லாம் பொய்யான குற்றச்ச்சாற்று என்று சொன்னார். அதன்பிறகு ஜூன் 1 ஆம் தேதி விசாரணையின் போது வழக்கு முடிந்து விடும் என்பதால் திட்டமிட்டு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் திவ்யா மற்றும் திவ்யாவின் அம்மா தேன்மொழி ஆகியோரை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வேறுமாதிரி பேச வைத்திருக்கிறார்கள். அப்போது கூட இளவரசன் மீதோ, அவர் குடும்பத்தார் மீதோ எந்தக் குறையும் சொல்லவில்லை. ஆனாலும் தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் நான் என் அம்மாவுடன் இருக்க விரும்புகிறேன் என்றார். மேலும் 1 ஆம் தேதி நீதிபதிகள் சேம்பரில் நான் என் அம்மாவுடன் இருக்க விரும்புகிறேன். ஏனென்றால் என் அம்மா மற்றும் என் தம்பியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் நான் அவரோடு இருக்கிறேன். என் அம்மாவை சமாதானப்படுத்தி, அதன் பின்பு எதிர்காலத்தில் நான் இளவரசனோடு வாழ்வேன் என்று தான் சொன்னார். அதைக் கேட்ட நீதிபதிகள் இனி திவ்யா, நீதிமன்றத்திற்கு வரவேண்டிய அவசியமில்லை என்கிறார்கள். இதன் பின்பு 3ஆம் தேதி பாமக வழக்கறிஞர் பாலு என்பவர், திவ்யாவைத் தேவையில்லாமல் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துவந்து செய்தியாளர்களிடம், நான் நீதிபதிகளிடம் இளவரசனோடு வாழ விரும்புகிறேன் என்று சொல்லவில்லை. இனி வாழ மாட்டேன் என்றுதான் சொன்னேன் என்று பொய்யாக சொல்ல வைக்கிறார்கள். ஆனால் திவ்யா நீதிபதிகளிடம் பேசியது நீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இது என்ன உணர்த்துகின்றது என்றால் திவ்யா முழுக்க முழுக்க பாமக, வன்னியர் சங்கத்தின் பிடியில் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இன்று வரை அவர் அந்த பிடியில், ஒரு நிர்பந்தத்தில்தான் இருக்கிறார் என்பது எங்களின் உறுதியான கருத்து.

இளவரசனின் இறுதி நிகழ்வு எப்போது? அவருடைய இறுதி நிகழ்வை எவ்வாறு நடத்தத் திட்டமிட்டுள்ளீர்கள்?

மறு பிரேதப் பரிசோதனை கேட்டிருக்கிறோம். நாளை மருத்துவர் சம்பத்குமார் உடலை ஆய்வு செய்கிறார். நாளை மறுநாள் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். மறு பரிசோதனை தேவையில்லை என்று சொன்னால் உடனே இறுதி நிகழ்வு நடக்கும். இல்லையென்றால் மறு பரிசோதனைக்குப் பிறகு உடலைப் பெற்று அவரின் சொந்த ஊரான நத்தத்தில் தலைவர்கள், பொதுமக்கள், அவரின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்வோம். அனைவரும் கலந்துகொள்ளும் அவரின் உடல் அடக்கம், மிகவும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறும். இதற்கு மாவட்டக் காவல்துறையும், ஆட்சி நிர்வாகவும் எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். மேலும் உடல் அடக்கம் நடைபெறும் நாளில் 144 தடை உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என இளவரசன் குடும்பத்தார் சார்பாகவும், பல்வேறு அமைப்புகள், தலைவர்கள் சார்பாகவும் கோரிக்கை விடுத்துள்ளோம். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அதைப் பரிசீலிப்பதாகக் கூறியிறுக்கிறார்கள்.

இளவரசன் பெற்றோரின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

இளவரசன் பெற்றோர் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். நல்ல ஒரு மகனை, கனவுகளோடு வாழ ஆரம்பித்த மகனை இன்று இழந்து தவிக்கிறார்கள். தங்களது மகன் மரணத்திற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். நடந்தது கொலையோ, தற்கொலையோ எதுவாக இருந்தாலும், கொலையாக இருந்தால் கொலையாளிகள் மீது, தற்கொலையாக இருந்தால் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நியாயமான, நேர்மையான விசாரணை நடக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதில் நீதிமன்றத்தையும் நான் குற்றம்சாற்ற விரும்புகிறேன். ஒருமுறை ஆட்கொணர்வு மனு போட்டபின்பு, சம்பந்தப்பட்ட நபர் ஆஜராகி நான் என் கணவரோடுதான் வாழ விரும்புகிறேன் என்று சொன்னபிறகு, அதுவும் ஒரு மேஜர் பெண் சொன்னபிறகு அந்த மனு நிலுவையில் வைத்து இழுத்தடிக்கப்பட்டது. அந்த கால அவகாசம்தான் அவர்களைப் பிரிப்பதற்கான சதித்திட்டம் அரங்கேறக் காரணமாக அமைந்தது. ஆக நீதிமன்ற நடைமுறைகளும் இந்த விஷயத்தில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. குறிப்பாக நீதியரசர் கே.என்.பாட்ஷா மிகவும் மோசமாக ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார். இது இளவரசனுடைய வழக்கறிஞராகிய என்னால் சுட்டிக்காட்டப்பட்டு வழக்கை நாங்கள் வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 19 ஆம் தேதி முடிய வேண்டிய வழக்கை தேவையில்லாமல் இன்று வரை இழுத்தடித்ததும் இளவரசன் மரணத்திற்குக் காரணம் என்பது எனது கருத்து.

FILE
இளவரசன் மரணம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

ஜாதிய சமூகத்தில், ஜாதியம் இருக்கும் வரை இப்படிப்பட்ட மரணங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஜாதி இல்லாத சமூகம் படைப்பதே, இளவரசன்களை நாம் இழக்காமல் இருக்கிற நிலைக்கு வழிவகுக்கும். ஜாதிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு போராட வேண்டும். ஜாதியத்துக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அரசுகள் முறையாக அமல்படுத்த வேண்டும். ஒரு வன்கொடுமை நிகழ்ந்தால் பி.சி.ஆர் புகாரை வாங்க மறுக்கும் சூழல்தான் காவல்துறையில் இருக்கிறது. எத்தனையோ தீர்ப்புகளை உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் சொன்ன பிறகும் கூட சட்டம் மதிக்கப்படாமல் இருக்கிறது. சட்டம் நேர்மையாக அமல்படுத்தப்பட வேண்டும். ஜாதியத்திற்கு எதிரான மனநிலையை மக்களிடம் உண்டாக்க வேண்டும். இப்படிப்பட்ட ஜாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். ஜாதி மறுப்பு மணம் புரிந்தோருக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். ஜாதியை வைத்து அரசியல் செய்கிற சக்திகளை அனைவரும் புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக நாடகக் காதல் என்று தேவையில்லாமல் "மனித சமூகத்திற்கு எதிரான ஒரு செயல்பாட்டை முன்னெடுத்த ராமதாஸ் போன்றவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்". அவர்கள் இப்படிப்பட்ட அரசியலை முன்னெடுப்பதன் மூலமாக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதை ஜாதி அமைப்புகளுக்கு உணரச் செய்ய வேண்டும். ஜாதியற்ற சமூகம் படைக்க வேண்டும் என்பதே இளவரசன் மக்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் செய்தி.

இது போன்ற வன்கொடுமைகள் மேலும் தொடராமல் தடுக்க அரசு, நிர்வாகம், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்திய சமூகத்தில், குறிப்பாக தமிழ் சமூகத்தில் அனைத்தையும் தீர்மானிப்பது ஜாதியாகதான் இருக்கிறது. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் ஜாதிதான். ஒருவன் பிறக்கும் போது அவன் எந்த ஜாதியில் பிறக்கிறானோ, அந்த ஜாதிய பொருளாதாரம் தான் அவனுடைய பொருளாதார நிலையாக இருக்கிறது. ஒருவன் ஒடுக்கப்பட்ட சமூகம் அல்லது தலித்தாக பிறந்தான் என்று சொன்னால் அவன் 90 சதவீதம் ஒரு ஏழையாகத்தான் இருக்கிறான். ஒருவன் ஆதிக்க ஜாதி என்று சொல்லப்படுகிற உயர் வகுப்பில் பிறக்கிறான் என்றால் அவன் வர்க்க ரீதியாகவே ஒரு வசதி படைத்தவனாகப் பிறக்கிறான். அந்த பிறப்புதான் அவன் கல்வியையும் தீர்மானிக்கின்றது. ஒருவன் உண்ணும் உணவு கூட ஜாதிதான் தீர்மானிக்கின்றது. முக்கியமாக திருமணத்தை ஜாதிதான் தீர்மானிக்கின்றது. இளவரசன் பிரச்சனையே கூட அதுதான். ஒரு மனிதன் இறந்த பிறகும் கூட சுடுக்காட்டில் புதைக்க அல்லது எரிக்க எந்த சுடுகாட்டில் புதைக்க வேண்டும் என்கிற பிரச்சனை வருகிறது. தலித் சுடுகாட்டிலா அல்லது தலித் அல்லாதார் சுடுகாட்டிலா என்ற பிரச்சனை வருகிறது. பொதுவான அரசியல் கட்சிகள் கூட ஜாதியை மையப்படுத்திதான் செயல்படுகிறார்கள். ஒரு தொகுதியில் எந்த ஜாதிக்காரரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்று பார்த்துதான் வேட்பாளரை நிறுத்துகிறார்கள். இவையெல்லாம் ஜாதியத்தை நிலை நிறுத்துவதற்கு, உயிரோடு வைத்திருப்பதற்கு காரணமாக அமைகின்றது. ஆகவே ஜாதியற்ற சமூகம் படைப்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழிகாட்டியிருக்கிற நடைமுறையை மிகத் தெளிவாக நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் கொண்டுவந்திருக்கின்ற வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஜாதிக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோரின் குழந்தைகளுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்கிற தம்பதிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட முயற்சிகள் எடுத்தால்தான் கொஞ்சம் கொஞ்சமாக ஜாதியை ஒழிக்க முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்