பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் கால் வீக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன...?
புதன், 20 ஏப்ரல் 2022 (17:00 IST)
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பல்வேறு உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில் ஒரு குறிப்பிடத்தகுந்த பிரச்சனையாகக் கருதப்படுவது கர்ப்பிணிப் பெண்களின் கால் மற்றும் பாதங்களில் வீக்கம் அடைதல் ஆகும்.
ஒரு பெண்ணின் உடல் அமைப்பு மிகவும் நுணக்கமானது. அவள் தாய்மை நிலைமையை எய்தியவுடன், அதாவது அவளது கருவறையில் ஒரு சிசு வளரத் தொடங்கியவுடன் அவளது உடல் இயக்க நிலைகளில் அதிக மாற்றங்கள் நிகழ்கின்றன.
இதுவரை அவளது உடல் செயல்பாட்டிற்கு மட்டுமே சுரந்து கொண்டிருந்த சுரப்பிகள் மற்றும் உற்பத்தியாகிக் கொண்டிருந்த இரத்த அளவுகள் என்று எல்லாமே மாறத் தொடங்கி விடும்.
பொதுவாக ஒரு பெண்ணின் உடலில் உற்பத்தியாகும் இரத்தத்தின் அளவிலிருந்து 50% அதிக அளவு இரத்தம் கர்ப்ப காலத்தில் உற்பத்தி ஆகின்றது.
இது தவிர உடலில் சுரக்கும் பல்வேறு திரவங்களின் அளவுகள் அதிகரிக்கின்றன. இதன் காரணமாக இரத்த ஓட்டத்தில் மாறுதல் ஏற்படுகின்றது. அதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. இதன் காரணமாகவே கர்ப்பிணிப் பெண்களின் கால் பாதங்களில் வீக்கம் ஏற்படுகின்றது.
கால் வீக்கமானது கர்ப்ப காலத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். அதாவது கருத்தரித்த ஆரம்ப நாட்களிலிருந்து குழந்தை பிறக்கும் காலம் வரை எப்போது வேண்டுமானாலும் இந்த வீக்கம் வரலாம்.