குளிர்ந்த நீரில் குளித்த பிறகு ஆசன பயிற்சி செய்தால், உடலை வளைப்பதற்கு சுலபமாக இருக்கும். சுத்தமான காற்று நிறைந்த தூய்மையான அறை யோகாப் பயிற்சிக்கு சிறந்தது. அல்லது இயற்கை காட்சிகள் உள்ள இடம் பூங்கா, பூந்தோட்டம், அருவி, நதிக்கரை போன்ற நீர் நிலைகள் இருக்கும் இடங்களில் பயிற்சி செய்து வந்தால் இன்னும் அதிகமான பயன் கிடைக்கும்.
பயிற்சியை வெறும் தரையில் செய்யக்கூடாது. மேடு பள்ளம் இல்லாத தரையில் போர்வை அல்லது யோகா மேட் விரித்து அதன் மேல் தான் பயிற்சி செய்யவேண்டும், கட்டிலின் மீதோ, மெத்தையின் மீதோ இருந்து கொண்டு பயிற்சி செய்வது தவிர்க்கப்படவேண்டும்.
இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு ஆசனங்களை செய்யக்கூடாது. ஆசனங்களை பயிலும்போது நம் மனதை அதில் முழுமையாக ஈடுபடுத்தி உற்சாகத்துடன் செய்ய வேண்டும். மனதினில் வேறு வேலைகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டு ஆசனங்களை செய்தால், ஆசனத்தினால் உண்டாகும் முழு பலனையும் பெற முடியாது.
ஆசனங்களை செய்யவேண்டிய முறை: ஆசனங்களை வேகமாக, அவசரத்துடன் செய்யக்கூடாது. நிதானமாக உடல், மனம், மூச்சு இவை மூன்றும் ஒன்றித்த நிலையில் ஆசனங்களை செய்ய முயற்சிக்க வேண்டும்.