கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்....!

பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க  வேண்டும்.
 
தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள். இனிப்புச்  சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
 
அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.
 
சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
 
தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச்  சுத்தப்படுத்துவது அவசியமானது.
 
முகப்பரு இருந்தால் உடனே அதனை கிள்ளாமல் இருப்பது நல்லது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
 
சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும். வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது  ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
 
உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
 
மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக்  கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.
 
ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும், அமீபியாசிஸ் எனும் தொற்றுக் கிருமி  தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக  இழக்க நேரிடும்.
 
சிலர் அடிக்கடி காபி, டீ குடித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் டீ, காபிக்கு பதிலாக தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது. நீங்கள்  நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்