அனைத்து பாகங்களும் பயன்தரக் கூடிய ஆவாரையை எவ்வாறு பயன்படுத்துவது...?
ஆவாரையின் இலை, பூக்கள், பட்டை, விதை, வேர் மற்றும் பிசின் ஆகிய அனைத்துமே மருந்தாகி பயன் தருகின்றன. இதன் அனைத்துப் பகுதிகளும் மிக்க துவர்ப்புடையதாக விளங்குகிறது.
ஆவாரையின் அனைத்து பகுதிகளும் மனிதருக்கு மருந்தாவது மட்டுமின்றி பயிர்களுக்கும் சிறந்த உரமாக விளங்கு கிறது. ஆவாரையின் அனைத்துப் பகுதிகளுமே காய்ச்சலைப் போக்கும் குணம் உடையது, கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியமாக செயல்பட வைக்கும் தன்மையுடையது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆவாரம் பட்டையை நீரில் இட்டுக் காய்ச்சிக் காலை தோறும் வாய் கொப்பளிக்கப் பயன்படுத்துவதால் வாய்ப்புண்கள் எவ்விதமானதாயினும் விரைவில் ஆறிவிடும்.
ஈறுகள் பலம் பெறும், பற்கள் கெட்டிப்படும். இது வற்றச்செய்யும் மருத்துவ குணம் உடையது. மேலும், உடலுக்கு டானிக்காக உரம் தரக்கூடியது.
ஆவாரையின் விதைகள் குளிர்ச்சியுண்டாக்கும் தன்மை உடையது. சிறுநீரோடு சர்க்கரை கலந்து வெளியேறுதலும், ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் சிறுநீர்த்தாரை எரிச்சலும், சிறுநீர் தொற்றும் ஆவாரையால் ஒழிந்து போகும்.
ஆவாரை இலை குளிர்ந்த தன்மையுடையது என்பதால் கோடை வெயிலில் பயணம் செய்பவர்கள் ஆவாரம் இலைக் கொத்துக்களை தலை மீது பரப்பி நிழல் தரும்படி வைத்துச் செல்வர். இதனால் வெப்ப சலனத்தால் வரும் மயக்கம், வலிப்பு போன்றவை தவிர்க்கப்பெறும்.
ஆவாரம் பூ, உலர்ந்த எலுமிச்சைத் தோல், பச்சைப்பயறு, ரோஜா இதழ்கள், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து மெல்லிய பொடியாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, பன்னீர் சேர்த்து குழைத்து முகப்பூச்சாக பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தின் சரும சுருக்கம் ஆகியன விலகும். இதை உடலுக்குப் பூசிக் குளிப்பதற்கும் பயன்படுத்தலாம்.
ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினம் காலை வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு சாப்பிட்டு வர ரத்தசோகை குணமாகும். புதிய ரத்தம் உற்பத்தி ஆகும்.
ஆவாரம் இலையைக் காயவைத்து அன்றாடம் மாலை வேளையில் வீட்டில் புகை மூட்ட இரவுக் கால பூச்சிகள், கொசுக்கள் வீட்டை விட்டு விலகிப் போகும்.
ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு சம அளவு பாசிப்பயறு மாவு மற்றும் சீயக்காய் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வருவதால் தலைப்பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியன குணமாகும். கூந்தல் செழுமையாகவும், கருமையாகவும் வளரும்.