மனிதர்களுக்கு நலம் தரும் 80 வகையான கனிமத் தாதுக்களைக் கொண்டது, ‘இந்துப்பு’. வட இந்தியர்கள் இந்துப்பு சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டே விரதங்களை முடிக்கிறார்கள். இந்துப்பு ஒருவகை பாறை உப்பாகும். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது.
குளிர்ச்சியூட்டும் தன்மையுள்ள இந்த உப்பு, பசியைத் தூண்டும்; மலத்தை இளக்கும் தன்மை கொண்டது. சாதாரண உப்பில் இருப்பதைப்போலவே இந்துப்பில் சோடியம், குளோரைடு உள்ளது.
இதில் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.
பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இந்துப்பு, நல்ல தண்ணீர் மற்றும் இளநீரில் ஊறவைத்துப் பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வருகிறது. உப்புக்குப் பித்தத்தை அதிகரித்து வாந்தி, மயக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மை உண்டு. ஆனால், இந்துப்பு பித்தத்தையும் கபத்தையும் சமன் செய்து சளி, இருமல் வராமல் தடுக்கும்.