கசப்பு சுவையும் வெப்பம் தன்மையும் நிறைந்த ஒரு மூலிகை தான் கரிசாலை. இதற்க்கு கரிசலாங்கண்ணி என்ற பெயரும் உண்டு. இது பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மற்றும் தங்கச்சத்து, சத்து, வைட்டமின் ஏ ஆகிய மூன்றும் கலந்த மூலிகையாகும்.
சாலையோரங்கள், வயல் வரப்புகள், ஆற்றங்கரைகளில் கரிசலாங்கண்ணிகளைச் செடியாக வளர்ந்து, மிகவும் செழிப்பாகக் காணப்படும். இதன் பூக்கள் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த கரிசலாங்கண்ணி மூலிகையில் டீ, சூப் தயாரித்து சாப்பிடலாம். மேலும் இதில் பலவிதமான மருத்துவ குணங்கள் உள்ளன.
கரிசலாங்கண்ணி பொடி 75 சதவீதம், கிராம்பு, கருவேலம்பட்டை, கடுக்காய், சுக்கு, வாய்விளங்கம், மாசிக்காய், ஆலம் விழுது, எலுமிச்சம் பழம், இந்துப்பு ஆகிய பொருட்களை சேர்த்து பொடி செய்தால், பல்பொடி தயார். இதை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யலாம். இந்த பல்பொடியை உபயோகித்தால் பல் நோய்களே வராது.
பசுமையான கரிசலாங்கண்ணி இலைகளைச் சுத்தம் செய்து பசையாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு ஒரு டம்ளர் மோரில் கலந்து, உள்ளுக்கு சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை குணமாகும். இதை 7 நாட்கள் வரை காலை, மாலை வேளைகளில் சாப்பிட வேண்டும். உணவில் உப்பு, புளி நீக்கி பத்தியத்தைக் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர மஞ்சள் காமாலை விலகியோடும்.