அத்திப்பழத்தில் புரோட்டின், சர்க்கரை, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துகள் அதிக அளவில் பொதிந்துள்ளது. பலவீனமானவர்களுக்கும் ஜுரத்தில் கிடந்தவர்களுக்கும் உடல் தெம்பாக அத்திப் பழத்தைச் சாப்பிடக் கொடுக்கிறார்கள்.
சர்க்கரை நோயினால் ஏற்பட்ட பிளவை, கீழ்வாதம், மூட்டு வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு அத்திப்பாலை பத்து போட்டால், விரைவில் குணம் தெரியும். வாத நோய்களுக்கு அத்திப் பாலை வெளிப்பூச்சாகத் தடவலாம். மூலம், பெரும்பாடு, ரத்த மூத்திர நோய்களுக்கு உள் மருந்தாகவும் கொடுக்கலாம்.
அத்திப்பட்டையில் மோர்விட்டு இடித்துப் பிழிந்த சாற்றைத் தொடர்ந்து குடித்துவந்தால் பெண்களைப் படுத்தி எடுக்கும் பெரும்பாடு ஓடிப்போகும். இதையே வேறு முறையில், அத்திப்பட்டையை நன்றாக இடித்து பஞ்சு போன்று மிருதுவாக்கி, சமையலுக்குப் பயன்படுத்தாத பாத்திரத்தில் போட்டு, அரைப் படி நீர் சேர்த்து, எட்டில் ஒரு பங்கு வரும் அளவுக்கு சுண்டக் காய்ச்சி, தினசரி மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் இந்தக் கஷாயத்தை குடித்துவந்தால் உதிரப்போக்கு, ஆசனக் கடுப்பு, சீத ரத்தபேதி போன்றவைக்கு தீர்வு கிடைக்கும்.