புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை வாய்க்கால்களிலும், ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும். இதன் இலைகளும், மெல்லிய தண்டுப் பகுதியும் உணவில் சேர்க்கப்படுகிறது.
சிலருக்கு உடலில் பித்த நீர் அதிகமாகி இரத்தத்தில் கலந்து தலைவலி, மயக்கத்தை உருவாக்கும். இவ்வாறு மயக்கம் ஏற்படுபவர்கள் வாரம் இருமுறை புளியாரைக் கீரையை துவையலாகவோ, மசியலாகவோ உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தால் எற்படும் பாதிப்புகள் குறையும்.
அஜீரணக் கோளாறாலும், வாயுக்களின் சீற்றத்தாலும் மலச்சிக்கலாலும் மூல நோய் உருவாகிறது. மூலத்தில் புண் ஏற்பட்டு பல பாதிப்புகளை உருவாக்குகிறது. இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புளியாரைக் கீரை அருமருந்தாகும்.
புளியாரைக் கீரையை சிறிதாக நறுக்கி நீர்விட்டு அலசி அதனுடன் பூண்டு, வெங்காயம், தேங்காய், மிளகாய், மிளகு சேர்த்து நெய்விட்டு வதக்கி துவையலாக அரைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய், மூல வாயு, உள்மூலம், மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.
இன்றைய இரசாயன உணவுகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கிறது. இதனால் அடிக்கடி ஜலதோஷம், இருமல், காய்ச்சல் என பல நோய்கள் உடலை எளிதில் தாக்குகின்றன.