அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் கொண்ட துத்திக் கீரை!!

துத்திக் கீரை உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு பயிராகும். மொத்தம் 20 வகையான துத்தி இனங்கள் உள்ளன. துத்திக் கீரையின் இலை, பூ, காய், முதலிய பாகங்கள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும். மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.
 
காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது. இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.
 
துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும். துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.
 
பல் ஈறு நோய் குணமாக துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.
 
குடல் புண் மற்றும் சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.
 
துத்தி இலையையும் துத்திப் பூவையும் சம அளவில் எடுத்து, மை போல் அரைத்து மூலப் பருக்களின் மேல் போட்டால் பருக்கள் மறையும். பருக்களினால் ஏற்பட்ட வீக்கம், வலிநீங்கி பருக்கள் மறைந்து விடும்.
 
துத்தி இலையை இடித்துச் சாறு தயாரித்து இதற்குச் சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும்.
 
துத்திப் பூவை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணியும். தாது விருத்தி ஏற்படும். விந்து கூடுதலாக உற்பத்தியாகும்.
 
துத்தி விதையைப் பாலில் ஊறவைத்து கற்கண்டு சேர்த்துச் சில தினங்கள் சாப்பிட்டால், சூட்டினால் ஏற்பட்ட இருமல் தீரும்.
 
எலும்பில் முறிவு ஏற்பட்டவுடன் எலும்புகளைச் சரியாக இணைத்து வைத்து, முறிவு ஏற்பட்ட இடத்தில் துத்திக் கீரையை அரைத்துக் கனமாகப் பூசி இதன் மேல் துணியால் கட்டி, பிறகு இதை அசையாமல் மூங்கில் சிம்புகளை முறையாக வைத்துக் கட்டி அசையாமல் வைத்திருந்தால், சில தினங்களில் உடைந்த எலும்பு கூடிவிடும்.
 
வகைகள்: பசும்துத்தி, கருந்துத்தி, சிறுத்துத்தி, பெருந்துத்தி, எலிச்செவிதுத்தி, நிலத்துத்தி, ஐயிதழ்துத்தி, ஒட்டுத்துத்தி, கண்டுத்துத்தி, காட்டுத்துத்தி,கொடித்துத்தி, நாடத்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத்துத்தி, பலன் எல்லாம் ஒன்றே.
 

வெப்துனியாவைப் படிக்கவும்