குடியரசுத் தலைவரிடம் யாகூப் மேமன் புதிய கருணை மனு

புதன், 29 ஜூலை 2015 (21:51 IST)
மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தனது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு இன்று (புதன்கிழமை) புதிய கருணை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
 

 
கடந்த 93 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அவரது தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
 
இதையடுத்து, நாக்பூர் மத்திய சிறையில் வரும் 30 ஆம் தேதி அவர் தூக்கிலிடப்பட உள்ளார். இந்த உத்தரவுக்கு தடை கோரி, யாகூப் மேமன் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. இந்த அமர்வு யாகூப் மேனனின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
 
இந்நிலையில், யாகூப் மேமன் தனது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு புதிய கருணை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
 
மரபுப்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைப்பார். உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கேற்ப குடியரசுத் தலைவரின் முடிவு அமையும்.
 
கடந்த ஆண்டு யாகூப் மேமன் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்தபோது அவரது மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்