வேறு ஜாதி பையனை திருமணம் செய்த பெண் உயிருடன் எரித்து கொலை: சகோதரர்கள் வெறிச்செயல்

ஞாயிறு, 6 மார்ச் 2016 (16:19 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன் வேறு ஜாதி பையனுடன் ஓடிபோய் திருமணம் செய்த பெண் தனது சொந்த கிராமத்துக்கு திரும்பிய போது தனது சகோதரர்களால் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்.


 
 
ராமேஷ்வரி தேவி எனப்படும் ரமோ நேற்று முன்தினம் தனது 3 வயது மகளுடன் தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருடைய அண்ணன் லக்ஷ்மன் மற்றும் மேலும் 6 சகோதரர்கள் சேர்ந்து அவரை உயிருடன் எரித்துக் கொன்றனர்.
 
இந்த சம்பவம் தெற்கு ராஜஸ்தானில் துங்கர்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. கௌரவ கொலை செய்த 7 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
 
ராமேஷ்வரி 8 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி ஒரு பிராமணர் இளைஞரை திருமணம் செய்து கொண்டார் என துங்கர்பூர் துணை கண்காணிப்பாளர் மதோ ச்ங் சோதா கூறினார்.
 
ராமேஷ்வரியின் மாமியார் கலாவதி அளித்த புகாரில் லக்ஷ்மன், பர்வீன் குமார், கல்யான் சிங், மஹேந்திர சிங், ஈஷ்வர் சிங், புபல் சிங், கஜேந்தர் சிங் ஆகியோர் ராமேஷ்வரியை தீ வைத்து எரித்தனர் என கூறியுள்ளார்.
 
ராமேஷ்வரி தன்னுடைய மூத்த மகன் பிரகாஷ் சேவக்கை திருமணம் செய்து ஊருக்கு வெளியே வசித்து வந்தார். மார்ச் 3-ஆம் தேதி ராமேஷ்வரி தனது மூன்று வயது மகளுடன் அவளுடைய மாமியாரை பார்க்க வந்துள்ளார்.
 
மாமியார் கலாவதி அவருடைய இளைய மகன், பேத்தியார் மற்றும் ராமேஷ்வரி ஆகியோர் மார்ச் 4-ஆம் தேதி வீட்டில் காம்பவுண்டின் உள்ளே பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே வந்த லக்ஷ்மன் மற்றும் அவருடன் வந்த 30 பேர் ராமேஷ்வரியை வெளியே இழுத்து கோவிலின் முன் அவள் மேல் எண்ணெயை ஊற்றி எரித்தனர் என காவல் துறையிடம் மாமியார் கலாவதி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்