மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் ஏன் பதவி விலகினார்?

சனி, 23 ஜூன் 2018 (15:57 IST)
இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகுவதாக சொல்லும் அவர், அமெரிக்காவிற்கு திரும்பிச் செல்கிறார்.



அர்விந்த் சுப்ரமணியன் பதவி விலகுவது பற்றிய செய்தியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது ஃபேஸ்புக் பதிவு மூலம் தெரிவித்தார். ''சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகுவதாக அர்விந்த் சுப்ரமணியன் சொன்ன காரணங்கள் பொருத்தமாக இருந்ததால், அவரது ராஜினாமாவை ஏற்பதைத் தவிர எனக்கு வேறு இல்லாமல் போனது''. என தெரிவித்துள்ளார்.

2014, அக்டோபர் 16ஆம் தேதியன்று இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக அர்விந்த் சுப்ரமணியன் பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிதி ஆயோக் தலைவர் அர்விந்த் பனகரியா ராஜினாமா செய்தார். தனது பணிக்காலம் முடிவடைந்ததும் மீண்டும் ஆசிரியப்பணிக்கு திரும்ப்போவதாக அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், 2016 ஜூன் மாதம் அறிவித்தார்.

இப்போது நம் முன் எழும் கேள்வி என்னவென்றால், நாட்டின் பொருளாதார மற்றும் நீதித்துறையை மேம்படுத்த ஆலோசனை வழங்கும் மூத்த அதிகாரிகள் பதவியில் இருந்து விலகுவது ஏன்?

இந்த கேள்வியை பொருளாதாரத்துறை விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவரும், மூத்த பத்திரிகையாளருமான பரஞ்சாய் கிருஹா டாகுர்தா மற்றும் எம்.கே.வேணுவிடம் பிபிசி முன்வைத்தது.


பொருளாதாரத்துறை நிபுணரும் மூத்த பத்திரிகையாளருமான பரஞ்சாய் கிருஹா டாகுர்தாவின் கண்ணோட்டம்

''அர்விந்த் சுப்ரமணியன் பதவியில் இருந்து விலகி, சொந்த காரணங்களுக்காக அமெரிக்கா செல்வதாக தெரிவித்திருக்கிறார். அவரது பணிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கேட்டபோதும், அதை அவர் நிராகரித்துவிட்டார்.

சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகுவதாக அர்விந்த் சுப்ரமணியன் சொன்னபோது, அவரது ராஜினாமாவை ஏற்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லாமல் போனது என்று கூறியிருக்கிறார்.இது உண்மையென்றே வைத்துக்கொள்வோம். அரசுக்கு பொருளாதார ஆலோசகராக அர்விந்த் சுப்ரமணியனை தேர்ந்தெடுக்கும் முடிவை எடுத்தவரும் அருண் ஜெட்லிதான்.

நான்காண்டுகளுக்கு முன்பு அர்விந்த் சுப்ரமணியன் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி ஏற்றுக்கொண்டார். அவரது நியமனத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களும் எழுந்தன.

அர்விந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஸ்வதேசி ஜாக்ரன் அமைப்புக்கும் சீற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.இதற்கு முன்பும், பல பொருளாதார நிபுணர்கள் வந்தார்கள், பிறகு அமெரிக்காவிற்கு திரும்பிவிட்டார்கள். ஆனால், அவற்றுடன் அர்விந்த் சுப்ரமணியனின் ராஜினாமாவை ஒப்பிடமுடியாது.

நிதி ஆயோக் பதவியை விட்டுச் சென்ற அர்விந்த் பனகரியா அதிருப்தியுற்று இருந்தார். அர்விந்த் சுப்ரமணியனுக்கு அதிருப்தி இருந்ததா என்பது பற்றி அவர் எந்த கருத்தும் தெரிவித்ததில்லை. இந்த பதவி விலகலின் பின்னணியில் இருப்பது அவரது சொந்த காரணங்கள் என்றே நாம் எடுத்துக் கொள்வோம்.

நாட்டின் பொருளாதார நிலை சிறப்பாக இல்லை

ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜனும் இந்தியாவில் இருக்கப்போவதில்லை என்று சொன்னார். அவர் பதவியில் தொடர்வதை ஆர்.எஸ்.எஸ், ஸ்வதேசி ஜாக்ரன் அமைப்பு மற்றும் ஆட்சியாளர்கள் பலர் விரும்பவில்லை.

ரகுராம் ராஜன் பதவியில் தொடர்வதை விரும்பவில்லை என்று சுப்ரமண்யம் சுவாமி வெளிப்படையாகவே கூறினார். அழுத்தங்கள் வரும்போது, சிலர் உடனடியாக வெளியேறிவிடுகின்றனர்; சிலருக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. நாட்டின் இன்றைய பொருளாதார நிலைமை சிறப்பாக இல்லை. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டது மற்றும் ஜி.எஸ்.டி போன்ற அரசின் முடிவுகள் அவசரகதியில் எடுக்கப்பட்டவை.

வேலையின்மையை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோதி, மக்களே வேலையின்மை பிரச்சனையை சரி செய்யவேண்டும் என்றும், அவர்கள் சுயதொழில் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

பொருளாதாரம் சிறப்பாக இல்லை என்பதால் ரகுராம் ராஜன் வருத்தப்பட்டார். அதுமட்டுமல்ல, இந்த அரசில் யார் சொல்வதும் கேட்கப்படுவதில்லை. பொருளாதார ஆய்வறிக்கையை படியுங்கள், பட்ஜெட்டையும் பாருங்கள். இரண்டையும் பார்த்தால், அரசு ஏற்றுக் கொண்ட ஆலோசனைகள், நிராகரிப்புகள் எவ்வளவு என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

ஆலோசகரின் வேலை ஆலோசனை தருவது மட்டுமே, அதை ஏற்றுக் கொள்வதும், புறந்தள்ளுவதும் நிதியமைச்சரின் விருப்பமே.'' என்கிறார் அவர்.


பொருளாதார நிபுணர் எம்.கே வேணுவின் கண்ணோட்டம்

''மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் பணி, தனது பணியில் மிகவும் முக்கியமானது என்று அர்விந்த் சுப்ரமணியன் கூறியிருந்தார். ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனும் இதேபோன்ற கருத்தை கூறினார்.

அப்போது, அவருக்கும் அரசுக்கும் இடையே இணக்கம் இல்லை என்று கூறப்பட்டது. ஜி.எஸ்.டி அமல் செய்யும் முடிவை சரி என்று அர்விந்த் சுப்ரமணியன் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜி.எஸ்.டியில் வரி நிர்ணயிக்கப்படும் முறைகளை, நீண்டகாலம் தொடரமுடியாது என்று அவர் தெரிவித்திருந்தார்.''

சுப்ரமணியனின் ஆலோசனையின்படி ஜி.எஸ்.டி விகிதங்கள் குறைக்கப்பட்டன ''பொதுமக்களின் பயன்பாட்டுக்கான பொருட்களுக்கு 28% வரி விதிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார். சில மாதங்களுக்கு பிறகு அதை ஏற்றுக் கொண்ட அரசு, வரி விகிதங்களை குறைத்தது.

அடுத்தாக, பண மதிப்பிழப்பு நடவடிக்கை அவருக்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும் அதுபற்றி அர்விந்த் சுப்ரமணியன் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. நான்கு ஆண்டுகளாக விவசாயிகளின் வருவாயில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அவர் பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டினார். அதேபோல், முதலீடுகள் தொடர்பாகவும் அவருக்கு அதிருப்தி இருந்தது.

அரசின் கூற்றுகளை தனது புள்ளிவிவரங்களின் மூலம் வெளுக்க வைத்துவிட்டார் அர்விந்த் சுப்ரமணியன். பொதுத் தேர்தலை நாடு எதிர்கொள்ளவிருக்கும் இந்த சமயத்தில் அரசுக்கு தனது ஆலோசனைகளின் அவசியம் இருக்காது என்று அர்விந்த் சுப்ரமணியன் நினைத்திருக்கலாம். அவர் ராஜினாமாவின் காரணமாகவும் அது இருந்திருந்தாலும், சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக பொதுவெளியில் கூறியிருக்கலாம்.'' எனக்கூறியுள்ளார் எம்.கே வேணு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்