மக்களவை தேர்தலின் ஐந்து கட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவே மீதியிருப்பதால் அரசியல் கட்சிகள் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. குறிப்பாக பாஜக, காங்கிரஸ் இரண்டு தேசிய கட்சிகளும் ஆட்சி அமைக்க தேவையான எம்பிக்களை தனித்து பெற வாய்ப்பில்லை என்பது போன்ற கருத்து நிலவி வருவதால் மூன்றாவது அணி ஆட்சியை பிடிக்க காய்கள் நகர்த்தப்படுகிறது.
இதில் முதல் படியாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று மூன்றாவது அணிக்கு ஆதரவு தேடி வருகிறார். இப்போதைக்கு மூன்றாவது அணி பிரதமர் வேட்பாளர்களில் முன்னணியில் இருப்பவர்கள் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியும் தான். ஆனால் மேற்குவங்கத்தில் மம்தா கட்சியும், உபியில் மாயாவதி கட்சியும் பெறும் எம்பிக்களின் எண்ணிக்கையை பொறுத்து ரேசில் யார் முந்துவார்கள் என்பது தெரியும்.
சந்திரசேகரராவ் அவர்களுக்கும் பிரதமர் ஆசை உள்ளது. தனது மகளை தெலுங்கானா முதல்வராக்கிவிட்டு தேசிய அரசியலில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் ஆக முடியவில்லை என்றாலும் முக்கிய மத்திய அமைச்சர் பதவியை கைப்பற்ற அவர் திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் திமுக கணிசமான தொகுதியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தரப்பில் இருந்து பிரதமர் பதவியை கேட்க வாய்ப்பு இல்லை என்றாலும், குறைந்தது பத்து அமைச்சர்களை பெற திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.