கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலச்சரிவு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் 28 நாட்களுக்கு பின்னர் தற்போது தான் அங்கு அரசு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மூன்று மலைக்கிராமங்களில் ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 420 பேர் பலியானதாகவும் காணாமல் போனவர்களை தேடும் பணி இன்னும் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சுமார் 8,000 பேர் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டிருந்ததால் பள்ளிகள் கடந்த சில நாட்களாக திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் பாதிப்படைந்த நிலையில் 28 நாட்களுக்குப் பின்னர் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் தங்கி இருந்தவர்களுக்கு மாற்று வசதிகளை கேரள அரசு ஏற்படுத்தி உள்ளதால் இன்று முதல் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்கின்றனர். மேலும் படிப்படியாக வயநாடு பகுதியில் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் குவிந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.