கேரளாவில் மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலா இணை அமைச்சராக உள்ள நடிகர் சுரேஷ் கோபி, தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார். தனக்கு பதிலாக புதிதாக நியமனம் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சி. சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
ஒரு கட்சி நிகழ்வில் பேசிய சுரேஷ் கோபி, "என்னை நீக்கிவிட்டு, சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சராக்க வேண்டும். இது கேரள அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயமாக இருக்கும்," என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
திரைப்பட வாழ்க்கையை விட்டுவிட்டு அமைச்சராவது தனது விருப்பமல்ல என்றும், மக்களவை தேர்தலில் கிடைத்த மக்கள் அங்கீகாரத்துக்காகவே கட்சி இந்த பதவியை அளித்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். மேலும், அமைச்சர் ஆன பிறகு தனது வருமானம் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சுரேஷ் கோபியால் பரிந்துரைக்கப்பட்ட சதானந்தன் மாஸ்டர், கண்ணூரை சேர்ந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஆவார். இவர் 1994-ஆம் ஆண்டு சிபிஐ (எம்) தாக்குதலில் தனது இரண்டு கால்களையும் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.