புல்வாமா தாக்குதல் தொடர்பான 'ட்வீட்' - அலிகர் பல்கலைக்கழக மாணவர் இடைநீக்கம்

வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (21:30 IST)
புல்வாமாவில் நடந்த தாக்குதல் தொடர்பாக 'எப்படி இருந்தது ஜெய்ஷ், அருமை சார்' என்ற வாசகத்துடன் ட்வீட் செய்த அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக (ஏஎம்யூ) மாணவர் அந்த பல்கலைகழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஏராளமான சமூகவலைதள பக்கங்களில் பகிரப்பட்டுள்ள இந்த மாணவரின் ட்வீட் ஜெய்ஷ்-ஈ-மொஹமத் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகவும் , பொறுப்பற்ற முறையில் இருப்பதாகவும் பலர் கருதுகின்றனர்.
 
இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஒன்றில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர் (சிஆர்பிஎஃப்) உயிரிழந்த சம்பவத்துக்கு பிறகு இந்த ட்வீட் பதிவு வெளிவந்துள்ளது.
 
பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் தீவிரவாதிகளை விரட்ட இந்தியா நடத்தியதாக கூறப்பட்ட துல்லிய தாக்குதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட உடி என்ற புகழ்பெற்ற இந்தி திரைப்படத்தின் வசனத்தையடுத்து இந்த ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது.
 
''இது எப்படி இருந்தது?'' என்பது போல இந்திய ராணுவ அதிகாரி வேடமேற்று அந்த திரைப்படத்தில் நடித்திருந்த விக்கி கௌஷல் தனது படை துருப்புகளிடம் கேட்பார். உடனே மிகுந்த ஆரவாரத்துடன் துருப்புகளாக நடித்த நடிகர்கள், ''அருமை சார் என்பார்கள்.
 
மிகவும் வைரலான இந்த வசனத்தை பிரதமர் நரேந்திர மோதி உள்பட பல அரசியல் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் பயன்படுத்தியுள்ளனர்.
 
தற்போது வைரலான இந்த ட்வீட் பதிவும் இது போன்ற வசனத்தை கொண்டுள்ளது.
அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவராக தன்னை அடையாளப்படுத்தி கொண்ட மாணவர் ஒருவர் இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த ட்வீட்டர் கணக்கு செயல்பாட்டில் இல்லை. ஆனால், இந்த மாணவரை தனது ட்வீட்டர் கணக்கில் இருந்து வெளியேறிவிட்டாரா அல்லது ட்வீட்டர் நிறுவனம் இந்த கணக்கை முடக்கியுள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை.
 
இந்த ட்விட்டர் பதிவுக்கு எதிராக ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து அலிகர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
''இந்த ட்வீட் பதிவு தொடர்பாக ஏராளமான புகார்கள் எங்களுக்கு வந்தது. நாங்கள் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இந்த ட்வீட்டர் கணக்கின் உரிமையாளர் யார் என்பதையும், அவர் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்தானா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். அவர் யார் என்பது தெரிந்தவுடன் மேலும் நடவடிக்கை எடுப்போம்'' என்று அலிகர் போலீஸ் அதிகாரியான நீரஜ் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் சார்பாக பேசிய ஒரு பேச்சாளர் மேற்கூறிய மாணவர் தங்கள் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்தான் என்று கூறினார்.
 
''அவர் எங்கள் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்தான். இது போன்ற விஷயங்களில் நாங்கள் எந்த சகிப்புத்தன்மையும் காட்டமாட்டோம். இந்த மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டதோடு அவர் மீது விசாரணையும் நாங்கள் துவக்கியுள்ளோம்'' என்று தெரிவித்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்