திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்காக அண்டை மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் பலர் வருகை தருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களாக விடுமுறை காலம் என்பதால் திருப்பதி செல்வோர் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த மாதத்தில் அதிகமான பக்தர்கள் வருகையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரிசனத்திற்காக மக்கள் காத்திருந்ததாக செய்திகள் வெளியானது.
இதனால் வரும் மாதங்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தற்போது செப்டம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
டிக்கெட்டுகளை பக்தர்கள் வழக்கம் போல் இன்று மாலை 4 மணி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைனின் முன்பதிவு செய்யலாம். மொத்தம் உள்ள 46,470 டிக்கெட்டுகளில் 8,070 டிக்கெட்டுகள் குலுக்கல் முறை தேர்வுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 38,400 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.