ரயிலில் பயணம் செய்கிறவர்கள் உஷார் : புது டெக்னிக்கை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கும்பல்

வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (18:26 IST)
மும்பையிலிருந்து மதுரைக்கு சென்ற ஒரு தம்பதியினரிடம் ஒரு கும்பல் நூதன முறையில் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மும்பையில்  வசிப்பவர் சந்திரன்(60), இவரது மனைவி மாரியம்மாள்(57). ஒரு துக்க நிகழ்வில் கலந்துகொள்ள, அவர்கள் மதுரை மாவட்டம், சோழ வந்தானுக்கு வர வேண்டியிருந்தது. அதனால், அவர்கள் மும்பை எக்ஸ்பிரஸ் ஏறி மதுரைக்கு புறப்பட்டனர்.
 
அந்த ரயில் நேற்று இரவு 10.45 மணிக்கு மதுரை வந்தது. ஆனால் அவர்கள் இறங்கவில்லை. மயக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. அப்போது, அவர் சட்டப் பையில் இருந்த செல்போன் அடித்துள்ளது. அதை கவனித்த அருகிலிருந்த ஒரு பயணி அந்த செல்போனை எடுத்து பேசியுள்ளார்.
 
போனில் பேசியவர், அவர்கள் மதுரையில் இறங்கவேண்டியவர்கள் என்று கூறினார். ஆனால், அதற்குள் ரெயில் விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. 
 
இதுகுறித்து, ரயில்வே போலிசாரிடம் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள், சந்திரனையும், அவரது மனைவியையும் விருதுநகரில் கீழே இறக்கி விசாரித்தனர். அப்போது கடைசியாக ஈரோட்டில் டீ விற்பவரிடம், டீயும் பிஸ்கட்டும் வாங்கி சாப்பிட்டதாக கூறியுள்ளனர்.
 
எனவே கொள்ளையடிக்கும் கும்பல் நூதனமாக செயல்பட்டுள்ளார்கள் என்று போலிசார் கருதுகிறார்கள். சந்திரனும் அவரது மனைவியும், மயக்கத்திலிருந்து விடுபடவில்லை. அவர்கள் சுய நினைவிற்கு வந்த பின்தான், அவர்களிடம் எந்தெந்த பொருள் கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது என்று தெரியவரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்