கடந்த டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது. மேலும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களையும் அரசு வழங்கியது. இதனிடையே ஜனவரி 13-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எம்பிக்கள் குழு சந்திக்க உள்ளதாகவும், அதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
வெள்ள பாதிப்புகளுக்கான மொத்தமாக ரூ.39,000 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் அவர்கள் நேரில் வலியுறுத்தினர். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறு கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.19,692 கோடி உடனே வழங்க வேண்டும் எனவும் எம்பிக்கள் குழு வலியுறுத்தியது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி ஆர் பாலு, வருகிற 27 ஆம் தேதிக்குள் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.