இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான வீரராக இருப்பவர் ப்ரித்வி ஷா. சமீபத்தில் மும்பை சாண்டாக்ரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டு ப்ரித்வி ஷா வெளியே வந்துள்ளார். அப்போது இன்ஸ்டா பிரபலமும், நடிகையுமான ஸ்வப்னா கில் செல்பி எடுப்பதற்காக ப்ரித்வி ஷாவை அணுகியதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஸ்வப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதாகவும், தனது காரை உடைத்து சேதப்படுத்தியதாகவும் ப்ரித்விஷா போலீஸில் புகார் அளித்தார். அதன்படி கடந்த சனிக்கிழமை ஸ்வப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள ஸ்வப்னா கில், கிரிக்கெட் வீரர் ப்ரித்விஷா மீது புகார் அளித்துள்ளார். அதில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றும், தான் ப்ரித்வி ஷாவுடன் செல்பி எடுக்கவே செல்லவில்லை என்றும் கூறியுள்ளார். தங்களது நண்பர்களில் ஒருவர் ப்ரித்விஷாவுடன் செல்பி எடுக்க சென்றதாகவும், அதற்கு ப்ரித்வி ஷாவும், அவரது நண்பர்களும் தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.