கர்நாடகத்துக்கு ஆப்பு வைத்த கர்நாடக வழக்கறிஞரின் வாதம்!

செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (17:45 IST)
காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்டது.


 
 
இந்த தீர்ப்பு வருவதற்கு காரணம் கர்நாடக அரசு வழக்கறிஞர் பாலி நாரிமன் வைத்த வதம் தான் அந்த அரசுக்கு பாதகமாக அமைந்துவிட்டது என கூறப்படுகிறது.
 
இந்த வழக்கில் கர்நாடக அரசின் வழக்கறிஞராக இருக்கும் பாலி நாரிமன் சரியாக வாதாடவில்லை என அம்மாநில எதிர்கட்சிகள் குற்றாம்சாட்டியது. அவரை இந்த வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
 
இதனையடுத்து மிகுந்த நெருக்கடியுடன் இன்று வாதாடிய பாலி நாரிமன் ஆக்ரோஷமாக இன்று தனது வாதத்தை முன் வைத்தார். காவிரி மேற்பார்வை குழு விசாரித்து தண்ணீர் பங்கீடு குறித்து முடிவெடுக்கிறது. நாங்கள் அங்கு வாதிட்டுக்கொள்கிறோம்.
 
இதில் கோர்ட் அவ்வப்போது தலையிட்டு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டாம். இது தவறு. மேலும், இது வறட்சி ஆண்டு என காவிரி மேற்பார்வை குழுவும் கூறியுள்ளது என்றார் ஃபாலி நாரிமன்.
 
உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை விமர்சித்து பாலி நாரிமன் வாதாடிய இந்த வாதமே கர்நாடகாவுக்கு எதிராக மாறிப்போனது. காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் அராஜக போக்கை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கவனித்து வந்தது.
 
உச்சநீதிமன்ற பெஞ்சில் இருந்த நீதிபதிகளின் ஒருவரான அமித் மிஷ்ரா, இந்த வாதத்துக்கு பின்னர் ஒரு கருத்தை வெளியிட்டார். அதில், அவ்வப்போது உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாமெனில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். அதனால் தண்ணீருக்காக தமிழகம் கர்நாடகாவிடம் கையேந்த தேவையில்லை என்றாராம்.
 
மேலும், 4 வாரத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், நாளை முதல் 6000 கன அடி வீதம் வரும் 27-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

வெப்துனியாவைப் படிக்கவும்