காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, வரைவு திட்ட அறிக்கையை மே 3ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், வரைவு திட்டம் தாக்கல் செய்ய, இன்னும் 2 வார கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது.
அப்போது, வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. அதற்கு கர்நாடக தேர்தலை மத்திய அரசு காரணம் காட்டியுள்ளது. அதாவது, காவிரி வரைவு திட்டம் தயார் நிலையில் இருக்கிறது. ஆனால், பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர் கர்நாடக தேர்தல் பரப்புரையில் இருப்பதால் ஒப்புதல் பெற இயலவில்லை. எனவே, அதற்கான ஒப்புதலை பெற முடியவில்லை என மத்திய அரசு காரணம் கூறியது.
ஆனால், இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. காவிரி நீர் விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டி.எம்.சி நீரை திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இதை கர்நாடக அரசு செய்யாவிடில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர்கள் எச்சரித்தனர். 4 எம்.டி.சி நீரை தர கர்நாடக அரசு மறுத்தால், நீரை திறந்து விட முடியுமா? முடியாதா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வருகிற 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.