நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி போராட்டம்! – களேபரமான வட மாநிலங்கள்!

வெள்ளி, 10 ஜூன் 2022 (16:56 IST)
இஸ்லாமிய இறைதூதரான நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி வடமாநிலங்களில் போராட்டம் சூடுபிடித்துள்ளது.

பாஜக தேசிய பெண் செய்தி தொடர்பாளரான நுபுர் சர்மா சமீபத்தில் இஸ்லாமிய இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்த நிலையில் பாஜக தலைமை நுபுர் சர்மாவை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியது.

இந்த விவகாரத்தில் இந்திய அரசும் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. எனினும் நபிகள் குறித்து அவதூறாக பேசிய நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என்றும், சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பஞ்சாப், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் பலர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் அட்டாலா பகுதியில் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் எழுந்த நிலையில் இருதரப்பிலும் கற்களை வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நுபுர் சர்மாவின் உருவ பொம்மையை எரித்து பலர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தெலுங்கானாவில் ஹைதராபாத் மெக்கா மசூதி அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸார் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று அகற்றியுள்ளனர். மகாராஷ்டிராவின் சோலாப்பூர் பகுதியில் நுபுர் சர்மாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்