உருக்கு மனிதரின் ஒற்றுமைச் சிலை

வியாழன், 30 அக்டோபர் 2014 (17:57 IST)
(சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை (அக்டோபர் 31) முன்னிட்டுச் சிறப்புக் கட்டுரை)

காந்தி அடிகளின் பெயர் ஞாபகத்திற்கு வரும் போதெல்லாம் அஹிம்சை தான் நம் நினைவிற்கு வருகிறது. இதுபோல் சர்தார் வல்லபாய் பட்டேல் என்கிற பேர் ஞாபகத்திற்கு வரும் போதெல்லாம் இரும்பு மனிதர் என்ற பெயரும் நினைவிற்கு வருகிறது. 
 
சர்தார் பட்டேலுடைய, உலகத்திலேயே மிகப் பெரிய திருவுருவச் சிலையைக் குஜராத்தில் அமைப்பதற்குத் தேசிய திட்டம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.200 கோடி அனுமதித்துள்ளது. குஜராத் மாநில அரசு, சிலை அமைப்பதற்கு ரூ.500 கோடி அனுமதித்துள்ளது.
 
நர்மதா நதிக் கரையில் இந்தச் சிலையை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒற்றுமையும் அதற்குக் காரணமாக இருந்த சர்தார் பட்டேலையும் இந்தச் சிலை நினைவுபடுத்துகிறது. ஒற்றுமைக்கு அர்ப்பணித்த சேவைக்காக, சர்தார் பட்டேலின் பிறந்த நாள் (அக்டோபர் 31), தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
 
ஒற்றுமைச் சிலை:
 
182 மீட்டர் உயரம் கொண்ட சிலை, குஜராத் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணையிலிருந்து மூன்றரை கிலோமீட்டர் தூரத்தில் சாதுப்பெட் தீவில் அமைக்கப்பட உள்ளது. விந்தியா-சத்புரா மலைகளுக்கிடையே அமைக்கப்பட உள்ள இந்தச் சிலையைச் சுற்றி அறிவிற்கும் பொழுதுபோக்கிற்கும் நிறைய வசதிகள் கொண்ட சுற்றுலாத் தளம் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலாத் தளம் அமைப்பதின் மூலம் இந்தப் பகுதி, மிகவும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஒற்றுமைச் சிலை என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டம். 565 சிற்றரசுகளை ஒருங்கிணைத்து, இந்திய அரசை உருவாக்கியது, பட்டேலின் மிகச் சிறந்த சேவையாகும். பட்டேலின் வீரமும் நிர்வாகத் திறனும் இந்தச் சேவையின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இதை நினைவு கூர்வதற்காகத்தான் பட்டேலின் சிலை உருவாக்கப்பட உள்ளது.

   
ஒற்றுமைச் சிலை அமைப்பதற்கு லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்துடன் குஜராத் மாநில அரசு ஒப்பந்தமிட்டுள்ளது. இதற்கு ரூ.2979/- கோடி செலவு கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ரூ.700/-கோடி முதல் கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. தேசிய திட்டமாக அறிவித்ததன் மூலம் சிலை அமைக்கும் பணி வெகு வேகத்தில் நடந்து வருகிறது.
 
சிலை அமைக்கும் பணிகள் நான்கு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்று குஜராத் மாநில முதல்வர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் தெரிவித்துள்ளார். ரூ.2979/- கோடியில் 1347 கோடி சிலை அமைப்பதற்கும் 235 கோடி கண்காட்சி அரங்குகள் அமைப்பதற்கும் 83 கோடி தீவிற்குச் செல்ல ஒரு பாலம் அமைப்பதற்கும் 657 கோடி, 15 வருட காலம் சிலையையும் அதன் சுற்றுப்புறங்களையும் பாராமரிப்பற்கும் செலவிடப்படும். 
 
75 ஆயிரம் கனஅடி கான்கிரிட்டும், 5700 டன் உருக்கும், 18500 டன் கம்பிகளும், 22500 டன் செம்பும் சிலை அமைப்பதற்குத் தேவைப்படும். சிலை அமைப்பதற்குத் தேவையான இரும்பு, நாட்டிலுள்ள ஏழு லட்சம் கிராமங்கிளிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது என்று குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. நர்மதா மாவட்டத்திலுள்ள மலைவாழ் மக்களுக்கு இதனால் அதிகமாக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

 
நியூயார்க் நகரத்திலுள்ள சுதந்திர தேவி சிலையின் உயரம் 93 மீட்டர் தான். ஒற்றுமை சிலையின் உயரம் 182 மீட்டர். முன்னதை விட இரு மடங்காகும். ரியோ டி ஜெனிரோ நகரத்திலுள்ள ஏசுவின் சிலையை விட ஒற்றுமைச் சிலை 5 மடங்கு பெரிதாகும். 
 
மக்களை இணைக்கும் பொருளாதார, சுகாதார, கல்வி மையமாக ஒற்றுமைச் சிலையும் அதன் சுற்றுப் புறங்களும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே சர்தார் பட்டேலின் நினைவுற்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.
 
ஒற்றுமைச் சிலையுடன் சேர்ந்து, விவசாய ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு இதன் மூலம் வழி வகுக்கப்படும். நர்மதா மாவட்டத்தில் தொழிற்சாலைகள் வருவதற்கும் சுற்றுலாச் சேவை வலுப்படுத்தற்கும் ஒற்றுமைச் சிலை வழிவகுக்கும்.
 
ஒற்றுமைச் சிலை திட்டம், பணம் வீணாகும் திட்டம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றால் இந்தத் திட்டத்தின் நோக்கம் நடைமுறையில் வரும் போது, அது வளர்ச்சிக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்பதுதான் உண்மை. இந்தச் சிலையும், அதைச் சார்ந்த மையத்தையும் நோக்கி, உலகத்தின் பல பகுதிகளிலிருந்து, ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் பொதுமக்களும் தாராளமாக வந்து செல்வார்கள். இது சர்தார் பட்டேலின் நினைவிற்குச் சரியான அஞ்சலியாக விளங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்