ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு இந்திய விசா: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

வெள்ளி, 25 ஜூலை 2014 (07:57 IST)
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக இந்தியாவில் விசாரணை நடத்தும் ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு விசா வழங்குவதை பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்ட்து. போருக்குப் பிறகு அங்குள்ள தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக இலங்கை அரசு நடத்தி வருகிறது.

இந்தப் பின்னணியில், இப்போதுள்ள இலங்கை அரசுடன் இந்திய அரசுக்கு உள்ள உறவு குறித்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் ஆழ்ந்த கவலை உள்ளது.

இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் இலங்கையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக மக்களும் அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்களுக்கும், தமிழர்களைப் பாரபட்சமாக நடத்துவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக முந்தைய பிரதமருக்கு (மன்மோகன்சிங்) ஏராளமான கடிதங்கள் எழுதியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் ஜெனீவா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.

புதிய அரசு பொறுப்பேற்றதும் இந்தப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்தோம். கடந்த ஜூன் 3 ஆம் தேதி உங்களிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக ஐ.நா. சபையில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.

அதேபோல், தமிழ் ஈழம் அமைப்பது தொடர்பாக தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான பிரிவும் தீர்மானத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில், இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்த உள்ள ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு இந்தியா விசா வழங்க மறுத்துவிட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு அந்த நாட்டு அரசை விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் தமிழக மக்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக உள்ளது.

இலங்கைக்கு மிக அருகிலேயே உள்ள நாடு இந்தியா என்பதாலும் தமிழகத்தில் ஏராளமான இலங்கைத் தமிழ் அகதிகள் வசிப்பதாலும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக்காக இந்தியாவுக்கு வருவதே சரியானதாக இருக்கும்.

எனவே, இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு சர்வதேச விசாரணைக் குழுவுக்கு விசா வழங்குவதையும், அந்தக் குழு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் விசாரணை நடத்தி முடிப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான தமிழகத்தின் கவலையை நீக்குவதற்கு இது உதவும்“ என்று அவர் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்