விசாரணைக்கு உத்தரவிட்ட கர்நாடக அரசு : சசிகலா மீது நடவடுக்கை பாயுமா?

வியாழன், 13 ஜூலை 2017 (13:05 IST)
கர்நாடக சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்துள்ளார்.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத்தண்டனை பெற்று, தற்போது பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு, தனி சமையலறை உட்பட பல வசதிகளை சிறைத்துறை டிஜிபி சத்தியநாரயணா செய்து கொடுத்துள்ளார் எனவும், இதற்காக ரூ.2 கோடி பணம் கை மாறியுள்ளது எனவும், சிறைத்துறை டிஐஜி ரூபா இன்று புகார் தெரிவித்துள்ளார். 
 
இந்த விவகாரம் தமிழகம் மற்றும் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை டிஜிபி சத்தியநாராயணா மறுத்துள்ளார். 


 

 
இந்நிலையில், இதுகுறித்து விசாரிக்க உயர் மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்துள்ளார். மேலும், விசாரணையின் முடிவு வரும் வரை அனைவரும் பொறுத்திருங்கள் எனவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
 
இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சசிகலா மற்றும் டிஜிபி சத்தியநாராயன உட்பட சில சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது. இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்