டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் காற்று மாசு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிவிடும் நிலையில், இந்த ஆண்டும் காற்று மாசுபாடு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒரு நாளுக்கு 40 சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீங்குகள் டெல்லி காற்றை சுவாசிப்பதற்கு சமம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், சுவாச பிரச்சனை காரணமாக ஏராளமான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருவனந்தபுரம் பாராளுமன்ற எம்பி சசிதரூர் சமூக வலைதளத்தில், உலகின் அதிகம் காற்று மாசுபட்ட நகரமாக டெல்லி உள்ளது, இரண்டாவது இடத்தில் உள்ள டாக்காவை விட 4 மடங்கு அதிகமான நச்சுக்காற்று டெல்லியில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும், டெல்லி மாசு குறைபாடு நீங்கவில்லை. இது மனிதர்கள் வசிக்கும் நகரமாக இல்லாத வகையில் மாறிக்கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், டெல்லி இனிமேலும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.