சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான நெருங்கிய நட்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த மாநாட்டின் இரண்டாவது நாளில், ஒரு சங்கடமான தருணத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சிக்கியுள்ளார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக, மோடியும் புதினும் தங்களுக்குள் ஆழமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் ஷெபாஸ் ஷெரீப் அருகில் இருப்பதை கவனிக்காமல், அவரை இருவருமே புறக்கணித்துவிட்டு சென்றனர்.
இந்தச் சம்பவம், பாகிஸ்தான் பிரதமருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. அவர் மனச்சோர்வுடன் நின்றிருந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கடந்த காலங்களில் இதுபோன்ற சங்கடமான தருணங்களை எதிர்கொண்டுள்ளார். இதற்கு முன், ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமரை ஒருமுறை காக்க வைத்த சம்பவமும் நடந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள், பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை, உலக அரங்கில் அதன் செல்வாக்கு, குறிப்பாக அமெரிக்காவுடன் முரண்பட்டு கொண்டிருக்கும் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் முன், எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை உணர்த்துகிறது. அதேசமயம், இந்தியாவின் இராஜதந்திர அணுகுமுறை மற்றும் அதன் சர்வதேச செல்வாக்கு அதிகரித்திருப்பதற்கான ஒரு தெளிவான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.