ஷீனா போரா கொலை வழக்கு: தாய், 2 ஆவது கணவர் நீதிமன்றத்தில் ஆஜர்

திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (13:44 IST)
இளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கில், அவரது தாய் இந்திராணி மற்றும் அவரது 2 ஆவது கணவர் சஞ்சீவ் கன்னா ஆகியோரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
 
மும்பையைச்  சேர்ந்த இளம்பெண் ஷீனா போரா கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு காட்டுப்பகுதியில் எரித்து புதைக்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஷீனாவின் தாய் இந்திராணியின் கார் ஒட்டுனர் ஷியாம் ராயை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்திராணி, அவரது 2ஆவது கணவர் சஞ்சீவ் கன்னா, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 
அவர்களை கடந்த சில நாட்களாக போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். மும்பை கார் காவல்நிலையத்தில்  அவர்களிடம்  தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
 
3 பேரும் காவல்துறையினரிடம் கொலை தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். ஆனால் கொலைக்கான உறுதியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. மேலும் சரியான ஆதரங்கள் கிடைக்கவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் ஷீனாவின் காதலன் ராகுல் இந்த கொலையில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது தந்தை பீட்டர் முகர்ஜி இந்திராணியின் 3ஆவது கணவர் ஆவார். 
 
ராகுல் ஷீனாவை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால் 2012 ஆம் ஆண்டு ஷீனா கொலை செய்யப்பட்டதும் மும்பையில் இருந்து டேராடூன் சென்று தாயுடன் வசித்து வந்தார்.
 
ஷீனா ராகுலுக்கு சகோதரி என்ற உறவு முறை என்பதால் இதை ஆரம்பத்தில் இந்திராணி கண்டித்ததார். ஆணால் ஷீனா இதை கேட்காததால் இந்திராணி கொலை செய்தார் என்று தெரிவித்தனர்.
 
இதைத் தொடர்ந்து ஷீனா கொலை தொடர்பாக, ஷீனாவின் சகோதரர் மிகேலிடம் மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மிகேல் காவல்துறையினரிடம் சில  ஆதாரங்களை கொடுத்தார். மேலும் தன்னை, இந்திராணியும் சஞ்சீவ் கன்னாவும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
 
இந்நிலையில் இந்திராணி, சஞ்சீவ் கன்னா உள்ளிட்ட 3 பேரின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று அவர்களை காவல்துறையினர் மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 
அவர்களிடம் இன்னும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாலும், கொலைக்கான உண்மையான முகாந்திரம் தெரியவில்லை என்றும் கூறி, மேலும் காவல் நீடிப்பு கேட்டு காவல்துறையிர் தரப்பில், நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்