வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி ரூபாய்!: திகைத்துப் போன எம்.எல்.ஏ. பாதுகாவலர்

வியாழன், 5 ஜனவரி 2017 (12:34 IST)
தனது வங்கிக்கணக்கில் திடீரென 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதைக் கண்டு உ.பி. மாநில எம்.எல்.ஏ. ஒருவரின் பாதுகாவலர் காவல் துறையிடம் புகார் அளித்தார்.


 

உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான இர்பான் சோலங்கி என்பவரின் பாதுகாவலராக பணியாற்றி வருபவர் குலாம் ஜிலானி. இவர் கான்பூர் மால் சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் வங்கி கணக்கு வைத்துள்ளார்.

நேற்று முன் தினம் இரவு ஏ.டி.எம். மையத்தில் தனது கணக்கில் இருந்து ரூ.2 ஆயிரத்தை எடுத்த பிறகு அவருக்கு அதற்கான வங்கி கணக்கு விபரம் கொண்ட ஸ்டேட்மெண்ட் வந்தது.


 

அப்போது, தனது வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ.100 கோடி இருப்பதாக பதிவாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜிலானி, உடனடியாக எம்.எல்.ஏ. சோலங்கிக்கு தகவல் அளித்தார். எம்.எல்.ஏ., உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கும்படி கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து கூறியுள்ள சமாஜ்வாடி சட்டமன்ற உறுப்பினர் இர்பான் சோலங்கி கூறுகையில், ’என் நல்ல பெயரை கெடுக்க எதிரிகள் சதி செய்து இப்படி பணம் போட்டு இருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார். தற்போது  ஜிலாயின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்