கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து 4.5 கிலோகிராம் தங்கம் திருடப்பட்டதாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது. திருடப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதியாக, பல்லாரியை சேர்ந்த நகைக்கடை அதிபர் ஒருவரிடம் இருந்து தங்க நாணயங்கள் மற்றும் 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எஸ்.பி. சசிதரன் தலைமையிலான விசாரணையில், முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவரது வீட்டில் இருந்து ரூ. 2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை பூசாரி என்று கூறி தன்னை அறிமுகப்படுத்திய போற்றி, பல்லாரி நகைக்கடை அதிபர் கோவர்தனுடன் நட்பு கொண்டு, திருடிய தங்கத்தை விற்பனை செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
'துவாரபாலகா தகடுகள்' மற்றும் 'ஸ்ரீகோவில் கதவு சட்டங்கள்' ஆகியவற்றில் தங்கம் காணாமல் போன இரண்டு வழக்குகளில் போற்றி தற்போது முக்கிய குற்றவாளியாக உள்ளார். இந்த திருட்டு சம்பவத்தில், சென்னையிலுள்ள ஒரு நிறுவனம் மற்றும் இடைத்தரகர்கள் அடங்கிய ஒரு பெரிய நெட்வொர்க் ஈடுபட்டுள்ளது குறித்து சிறப்பு புலனாய்வு குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.