மோடி அறிவிப்பின் 1 மணி நேரத்துக்கு முன்னர் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்த பாஜக பிரமுகர்!

சனி, 12 நவம்பர் 2016 (09:38 IST)
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி இரவு அறிவித்தார். நாடே அதிர்ச்சியடைந்தது. மக்கள் நூறு ரூபாய் நோட்டுக்கு அலைந்து கொண்டிருந்தனர்.


 
 
இன்னொரு பக்கம் கையில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் எப்படி டெபாசிட் செய்வது என்ற குழப்பம். அடையாள அட்டை, அதிகமான தொகை என்றால் அரசுக்கு தகவல் என பல சிக்கல்கள் உள்ளன.
 
கருப்பு பணம் வைத்திருப்போர் அதை எப்படி மாற்றுவது என விழிபிதுங்கி உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி இந்த அறிவிப்பு வெளியிடும் 1 மணி நேரத்திற்கு முன்னர் மேற்கு வங்க பாஜக பிரமுகர் ஒருவர் 1 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்த தகவல் வந்துள்ளது. டெபாசிட் செய்யப்பட்டது அனைத்தும் 1000 ரூபாய் நோட்.


 
 
முன்னதாகவே பாஜகவினருக்கு இந்த அறிவிப்பு குறித்து தகவல் கொடுக்கப்பட்டதா என பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது இந்த விவகாரம். இந்நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போகும் என்பது பாஜகவுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் முன்னதாகவே தெரியும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்